பின்பு இறைவன் சுந்தரரை யடைந்து, 'நீ இன்றிரவே சங்கிலிபாற் சென்று உன்னைப்பிரியேன் என்று சபதம் செய்து கொடுத்தல் வேண்டும் என்று கூறி நாம் செய்யத்தக்கதுண்டாயின் சொல்க' எனவும் கூறிநின்றார். சுந்தரர் இறைவனெழுந்தருளிய தலங்கள் யாவற்றையும் தரிசிக்கும் விருப்புடையோனாகிய எனக்கு இவ்வுறுதிமொழி பொருந்தாதென்றெண்ணியவராய், 'எம்பெருமானே, அடியேன்நும் சந்நிதிக்குச் சங்கிலியோடு சபதம் செய்யவரும் போது தேவரீர் அவ்விடத்தைவிட்டு ஆலயத்திலுள்ள மகிழமரத் தடியில் எழுந்தருளியிருத்தல் வேண்டும்' என வேண்டிக் கொண்டார். இறைவனும் அதற்கு இசைவு தெரிவித்தருளி சங்கிலியார் முன் கனவில் தோன்றி, 'நங்கையே, சுந்தரன் சபதம் செய்துதர இசைந்துள்ளான், அவன் நம்திருமுன்பு சபதம் செய்யவரும்போது நீ அதற்குடன் படாமல் மகிழமரத்தடியில் சபதம் செய்து தரும்படிகேள்' என்று கூறி மறைந்தார். சங்கிலியார் விழித்தெழுந்து பாங்கியருக்குத் தமக்குச் சிவபிரான் அருளியதை எடுத்துரைத்தார். வைகறைப்பொழுதில் தம்திருப்பணி செய்யச் சங்கிலியார் திருக்கோயிலை யடைந்தார், அவர் வருகையை எதிர்பார்த்திருந்த சுந்தரர் அவர் அருகே சென்று தமக்கு இறைவனருளியவாற்றை எடுத்துரைத்தார். சங்கிலியார் நாணத்தால் ஒருபுடையொதுங்கித் திருக்கோயிலுள் சென்றார். சுந்தரரும் பின்தொடர்ந்தது சென்று சபதம் செய்து தரற்பொருட்டு 'இறைவன் திருமுன் வருக' எனச் சங்கிலியாரை அழைத்தார். பாங்கியர்கள் 'இதற்காக இறைவன் திருமுன் சென்று சபதம் செய்தல் தகாது. இங்குள்ள மகிழமரத்தடியில் சபதம் செய்து தந்தால் போதும்' என்றனர். சுந்தரர் மனம் மருண்டு மறுத்தால் திருமணம் தடைப்படு மென்று கருதி உடன் பட்டார். மகிழமரத்தை அடைந்து மூன்றுமுறை வலம்வந்து சங்கிலியாரை நோக்கி, 'உன்னைப்பிரியேன்' என்ற உறுதிமொழி யுரைத்தார். இதனைக் கண்ட சங்கிலியார் சூளுறவு வழுவினால் அவர்க்கு வரும் துன்பத்தையெண்ணி மனங்கலங்கி ஒரு பக்கத்தே மறைந்து நின்றார். சுந்தரர் சூளுறவு முற்றியபின் திருக்கோயிலுக்குள்ளே சென்று இறைவனது அருளிப்பாட்டை வியந்து போற்றி கோயிற்புறத்தே வந்தார். சங்கிலியாரும் கன்னிமாடத்தை அடைந்தார். ஒற்றியூரிறைவர் அடியார்கள் கனவில் தோன்றிச் சங்கிலியைச் சுந்தரர்க்கு மணம் முடிக்கும்படிக் கட்டளையிட்டவாறு அடியார்கள் கூடிப் பலவகைச் சிறப்புக்களுடன் திருமணம் செய்து வைத்தார்கள். நம்பியாரூரர் தம்வாழ்க்கைத் துணைவியாகிய சங்கிலியாருடன் கூடி ஊழியும் ஒரு கணமெனத் தோன்ற ஐம்புல இன்பமும் ஆரத்துய்கும் அந்நிலையில் பேரின்பக் கடலில் திளைத்து மகிழ்வாராயினார்.
|