வன்றொண்டர் சங்கிலியாரோடு மகிழ்ந்துறையும் அந்நாளில் தென்றற் காற்று திருவொற்றியூரில் வந்து உலாவிற்று. தென்றல் வீசக் கண்டதும் திருவாரூரில் தியாகேசப் பெருமான் வசந்த காலத்து எழுந்தருளி வரும் காட்சியும் அக்காட்சியைக் கண்டு பரவையார் ஆடிப்பாடி மகிழ்வதும் சுந்தரர் தம் எண்ணத்திரையில் உலா வந்தன. புற்றிடங் கொண்டாரையும் தம்மை விரும்பும் அடியார்களையும் மறந்திருந்தேனே என்று மனமயங்கி ஆரூர்பெருமானை எண்ணிப் பிரிவாற்றமையினால் 'பத்திமையும் அடிமையையும்' என்று திருப்பதிகம் தொடங்கி 'எத்தனை நாள் பிரிந்திருப்பேன் என்னாரூர் இறைவனை' என்ற குறிப்புடன் பதிகம் பாடினார். ஒரு நாள் திருவாரூரை மிக நினைந்து ஒற்றியூர்ப் பெருமானை வணங்கிக் கொண்டு ஒற்றியூரைக் கடந்து அடிபெயர்த்து வைத்தார். சங்கிலியார்க்குச் செய்த சபதம் பிழைத்த காரணத்தால் சுந்தரர்க்குக் கண்ணொளி மறைந்தது. சத்தியம் பிழைத்த காரணத்தான் இது நிகழ்ந்த தென்றெண்ணி ஒற்றியூர்ப் பெருமானை நினைந்து, "அழுக்கு மெய்கொடு" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடித் தொழுதார். திருவாரூர் செல்லும் உறுதியோடு நடந்தார். உடன் வருவோர் வழிகாட்ட வடதிருமுல்லைவாயிலைத் தொழுது அங்குத் திருப்பதிகம் பாடி பரவி திருவெண்பாக்கம் என்ற ஊரினை அடைந்தார். ஊன்று கோல் பெறுதல் : தொண்டர்கள் எதிர்கொள்ளச் சென்று திருவெண்பாக்கத்திறைவரை வழிபட்டுத், 'தேவரீர்! மகிழும் இத்திருக்கோயிலினுள் இருக்கின்றீரோ!' என்று விண்ணப்பம் செய்ய, பெருமானும் ஊன்று கோல் ஒன்று கொடுத்து, 'உளோம் போகீர்' என்று கூறியருளினார். நம்பிகளும் 'பிழையுளன பொறுத்திடுவர்' என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித்துதித்தார். அங்கு நின்றும் நீங்கிப் பழையனூரை வழிபட்டுக் காரைக்காலம்மை வழிபட்ட திருவாலங்காட்டிறைவனைப் பணிந்து திருப்பதிகம் பாடித் திருவூறலை வழிபட்டுக் காஞ்சிமா நகரத்தை அடைந்தார். இடக்கண் பெறுதல் : வன்றொண்டர் திருக்கச்சிக்காமக் கோட்டத்திலுள்ள காமாட்சி அம்மையைச் சென்று வணங்கினார். பின்னர் திருஏகம்பம் சென்று பெருமானைப் பணிந்தார். கண்ணளித்தருளும்படிப் பணிந்து வேண்டிப் பதிகம் பாடினார். தம்மை நினைந்து துதித்த நம்பி
|