யாரூரருக்கு இறைவன் இடதுகண் பார்வையினை வழங்கியருளி தம் திருக்கோலத்தையும் காட்டியருளினான். சுந்தரர் 'ஆலந்தானுகந்து' என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி ஆனந்தக் கூத்தாடினார். பின்னர் வெளிவந்து அப்பதியிலேயே சிலநாட்கள் தங்கியிருந்தார். திருவாரூர் நினைவுவந்தது. "திருவாரூர் எந்தைபிரானை என்று கொல் எய்து வேன்" என்று திருப்பதிகம் பாடிக்கொண்டே சென்றார். வழியில் திருவாமாத்தூரைத் தரிசித்துச் சோழ நாட்டை அடைந்து திருநெல் வாயிலரத் துறையை வணங்கித் திருவாவடுதுறையை வழிபட்டுத் திருத்துருத்தியை அடைந்தார். உடல்நோய் நீங்கப்பெறல் : திருத்துருத்தியை அடைந்த சுந்தரர் திருக்கோயிலுக்குட் சென்று வழிபட்டு அடியேன் உடம்பின்மேல் உள்ள பிணியை ஒழித் தருளவேண்டுமென்று வேண்டித்துதித்தார். சிவபிரான், இக்கோயிலுக்கு வடபால் உள்ள குளத்தில் நீராடில் இந்நோய் நீங்கும், என்று திருவருள் புரிந்தார். அவ்வண்ணமே சுந்தரர் திருக்குளத்தை யடைந்து நீராடினார். நீராடி எழும்போது உடல்நோய் நீங்கப்பெற்று ஒளிவீசும் திருமேனியைப் பெற்றார். எழுந்து கரையேறித் திருக் கோயிலுக்குச் சென்று, "மின்னுமா மேகங்கள்" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித்துதித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் திருவாரூரை அடைந்தார். வலக்கண் பெறல் : திருவாரூரை யடைந்த நம்பியாரூரர் முதலில் திருப்பரவையுண் மண்டளி யென்னும் திருக்கோயிலை யடைந்து திருப்பதிகம் பாடி, 'எனது துன்பத்தினைப் போக்கிக் கண்காணும்படிக் காட்டுதல் வேண்டும்' என்று வேண்டிக்கொண்டார். பிறகு அடியார்களுடன் ஆரூர் மூலட்டானேசுவரரை அர்த்தயாம காலத்திலே சென்று வழிபட எண்ணி அயன்மை தோன்ற வருத்திக் கூறும் நிலையில், திருப்பதிகம் பாடிக்கொண்டு, உள்ளே சென்று, வீழ்ந்து வணங்கினார். இறைவன் திருமேனி யழகைக் காண ஒரு கண் போதாமையை எடுத்துக்கூறி வலக் கண் வேண்டி மிக உருக்கமாக "மீளா அடிமை" என்ற திருப்பதிகத்தைப் பாடினார். ஆரூர்ப் பெருமான் மனமிரங்கி
|