பக்கம் எண் :

387
 

இசைவதேயாகில் இணங்குவேன்' என்றார் பரவையார். 'சுந்தரர் இங்கு வரவேண்டுவதே தாம் வந்த காரணம்' என்று சிவவேதியர் கூறப் பரவையார் 'திருவொற்றியூரில் சங்சிலியை மணந்த அவர்க்கு இங்கு ஒரு சார்புண்டோ? உமது பெருமைக்கு இத்தூது ஏற்றதன்று. நான் அதற்கு இசையேன்' என்று மறுத்துக் கூறினார். பரவையார்பால் சுந்தரர் கொண்டுள்ள வேட்கையைக்காண வேண்டுமென்ற திருவிளையாடலை மனத்திற்கொண்டு பரவையார் வீட்டிலிருந்து சிவபிரான் மீண்டும் சுந்தரரை வந்தடைந்தார்.

வெற்றியுடன் வருவார் என்று எதிர்பார்த்திருந்த சுந்தரரை அணுகினார் பெருமான். சுந்தரர் எதிர்கொண்டு வணங்கிப் 'பெருமானே! அன்று அடியேனை ஆட்கொண்டருளியதுபோல இன்று பரவையின் புலவி தீர்த்து வந்தருளினீர்' என்று கூறி நின்றார். பெருமான் 'நாம் பரவையின் இல்லம் அணுகி அவளிடம் வேண்டியும் மறுத்துவிட்டாள்' என்று கூறினார். ஆரூரர் அச்சொற்கேட்டு நடுங்கிப் 'பெருமானே! தேவரீர் திருமொழியையும் நும் அடியவளாகிய பரவை மறுத்தற்குரியவளில்லை, பரவையிடம் இன்று என்னைக் கூட வில்லையாயின் என்னுயிர் நீங்குவதுறுதி' என்று பலவாறு கூறித் திருவடியில் வீழ்ந்து வணங்கினார்.

சிவபிரான் நம்பியாரூரரை அருளோடு பார்த்து, 'நாம் மீண்டும் ஒருமுறை தூது சென்று உன்குறை முடிப்போம்! துயரொழிக' என்றருளிச் செய்து பரவையார் மாளிகையை நோக்கி மீண்டும் எழுந்தருளினார்.

பரவையார் மறையவராய்த் தூது வந்தவர் சிவபெருமானே என எண்ணித் துணிந்து அவரிடம் மறுத்து மொழிந்ததற் கிரங்கி யிருக்கும் காலைச் சிவபெருமான் தன் உண்மைத் திருக்கோலத்தோடு பரவையார் மாளிகையை அடைந்தருளினார். பரவையார் மகிழ்ச்சி பொங்க இறைவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி நின்றார். பெருமான் 'பரவையே! நம்பியாரூரன் ஏவ மீண்டும் உன்பால் வந்தோம்; முன்போல் மறுக்காதபடிச் சுந்தரனை ஏற்றுக்கோடல் வேண்டும்' என்றருள் செய்தார். பரவையார் அடியவர் பொருட்டு நள்ளிரவில் அங்கு மிங்குமாக அலைந்துழலும் பெருமானின் கருணையை வியந்து, இசைவு படாது என் செய்ய வல்லேன்' என்றார். பெருமான், 'நல்லுரை பகர்ந்தாய்' என்று கூறிப் பரவையாரைப் பாராட்டிச் சுந்தரரிடம் மீண்டும் எழுந்தருளினார்.

வழிமேல் விழிவைத்து இறைவனது வருகையை எதிர்பார்த்