பக்கம் எண் :

388
 

திருந்தார் சுந்தரர். இறைவன் எழுந்தருளியதும், 'யாதுகுறை கொண்டு வந்தீர்' என வினவினார். பெருமான் 'நாம் பரவையின் புலவி தீர்த்து வந்துள்ளோம். இனி நீ சென்று பரவையை அடைவாயாக' என்றருளிச் செய்தார்.

சுந்தரர், போகம் மோட்சம் இவற்றை அளிக்கும் இறைவன் கருணையைப் பாராட்டி வீழ்ந்து வணங்கினார். சிவபிரான் சுந்தரரைப் பரவையார்பால் அனுப்பிவைத்துப் பூங்கோயிலினுள் புகுந்தருளினார்.

நம்பியாரூரர் பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினார். பரவையாரும் தம் இல்லத்தை இனிதே அலங்கரித்துச் சுந்தரரை வரவேற்று வணங்கினார். சுந்தரர் பரவையாரின் கைகளைப் பற்றிய வண்ணம் உள்ளே சென்றார். இருவரும் இறைவனது எளிவந்த கருணையை வியந்து இன்ப வெள்ளத்துள் திளைத்தனர்.

சுந்தரர் புற்றிடங் கொண்டாரை நாடோறும் வணங்கிச் செந்தமிழ்ப் பதிகங்கள்பாடி இனிதிருந்தார்.

ஏயர்கோன் நட்பு :

நம்பியாரூரர் பெருமானைச் சிறிதும் மனம் நடுங்காது ஒரு பெண்ணிடத்து இரவில் தூதனுப்பி ஏவல் கொண்டார் என்ற செய்தி நாடு முழுதும் பரவியது. சோழநாட்டில் திருப்பெருமங்கலத்தில் வாழும் ஏயர்கோன் கலிக்காம நாயனார் இச்செய்தி கேட்டு உளம் வருந்தினார். 'இறைவனை அடியவர் ஏவல் கொள்வது தொண்டர்க்கு முறையன்று' என்று கருதியது அவர் உள்ளம். 'இச்செய்தி கேட்டும் என்னுயிர் செல்லவில்லையே' என்றிரங்கினார். 'அடியவரிடத்துள்ள கருணையால் இறைவன் இசைந்தாலும் அப்பெருமானை ஏவுதல் என்ன முறை? அரிவையரிடத்து வைத்த ஆசைக்கு இறைவனைத் தூது கொண்ட வன்றொண்டரைக் காணின் என்ன நேரும்' என்று சுந்தரர் மேல் சினம் கொண்டிருந்தார்.

ஏயர்கோன் தம்பால் சினங் கொண்டிருத்தலையறிந்த நம்பியாரூரர் தாம் செய்தது பிழையென வுணர்ந்தார். கலிக்காமர் செற்றத்தைத் தணித்தற் பொருட்டு இறைவனைப் பலமுறை இறைஞ்சினார். இவ்விருவரையும் ஒன்றுபடுத்தத் திருவுளங்கொண்ட இறைவன் ஏயர்கோன் கலிக்காம நாயனார்க்குச் சூலை நோயை ஏவினார். சூலை நோயால் தளர்ச்சியுற்று வாடிய கலிக்காமர் சிவபிரான் திரு