பக்கம் எண் :

390
 

அங்கிருந்து விடைபெற்றுத் திருப்பெருமங்கலத்தை யடைந்தார்.

பின்பு சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டுத் திருநாகைக் காரோணத்துக்குச் சென்று இறைவனை இறைஞ்சி விலையுயர்ந்த அணிகலங்களும் பிறவும் வேண்டுமென்ற குறிப்புடன் திருப்பதிகம் பாடினார். இறைவன் அவருக்குப் பொன்னும் நவமணிகளும் நறுமணப் பொருள்களும் பட்டாடைகளும் விரைந்து செல்லும் குதிரைகளும் பரிசாக வழங்கியருளினார். அப்பொருள்களைப் பெற்று மகிழ்ந்த சுந்தரர் நாகையினின்று புறப்பட்டுத் திருவாரூரை அடைந்தார்.

சேரமான் நட்பு :

சேரமண்டலத்தையாண்ட சேரமான் பெருமாள் நாயனார் நம்பியாரூரரது பெருமையினைத் தில்லைக் கூத்தனுணர்த்தக்கேட்டு சுந்தரரைக் காணவேண்டுமென்னும் பேரார்வத்துடன் தில்லைச் சிற்றம்பலவரைத் தரிசித்துத் திருவாரூரை அடைந்தார். சேரவேந்தர் வருகையுணர்ந்த சுந்தரர் அடியார்கள் புடைசூழச் சென்று அவரை எதிர்கொண்டழைத்தார். நம்பியாரூரரைக் கண்ட சேரமன்னர் அவர் அடிகளில் வீழ்ந்து இறைஞ்சினார். சுந்தரரும் அவரடிகளில் வீழ்ந்து இறைஞ்சித் தம் இருகைகளாலும் அவரைத் தழுவினார். இருவரும் நட்புபூண்டு திருக்கோயிலை யடைந்து வழிபட்டனர். சேரர்கோன் ஆரூர் இறைவனைப் பணிந்து 'மும்மணிக்கோவை' என்னும் நூலைப் பாடினார். சுந்தரர் சேரமான் பெருமாளை அழைத்துக்கொண்டு பரவையார் மாளிகையை அடைந்தார். சிறந்த முறையில் சேரமான் வரவேற்கப்பெற்று உபசரிக்கப்பெற்றார். இருவரும் ஆரூர்ப் பெருமானை வழிபட்டு மகிழ்ந்துறைந்தனர்.

நம்பியாரூரர் பாண்டி நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய தலங்களை வழிவட எண்ணிச் சேரர்கோனுடன் புறப்பட்டார். திருமறைக்காடு, அகத்தியான்பள்ளி, கோடிக்குழகர் முதலிய தலங்களைப் பணிந்து பாண்டியநாடடைந்து திருப்புத்தூரை வழிபட்டு மதுரையை அடைந்தார்கள்.

அப்பொழுது பாண்டியனும், பாண்டியன் மகளை மணம் புரிந்து வேட்டகத்திலிருந்த சோழனும் சுந்தரரையும் சேரமான் பெருமாளையும் வரவேற்றுத் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். சுந்தரர் திருப்பதிகம் பாடிப் போற்றினார். சேரமான் தமக்குத் திருமுகமனுப்பிய ஆலவாயண்ணலை வழிபட்டார். பாண்டியன்