இவ்விருவரையும் தம் அரண்மனைக்கு அழைத்து உபசரித்தான். இருவரும் சிலநாள் தங்கி ஆலவாயண்ணலை வழிபட்டினி துறைந்தனர். சுந்தரர் மூவேந்தருடன் திருப்பூவணம், திருவாப்பனூர், திருவேடகம் முதலிய தலங்களையிறைஞ்சித் திருப்பரங்குன்றத்தை யடைந்து திருப்பதிகம் பாடிப் பரவினார். பாண்டிநாட்டுத் தலங்களையெல்லாம் வழிபட விரும்பிய சுந்தரர் சேரமான் பெருமாளுடன் புறப்பட்டபொழுது அந்நாட்டு மன்னன் எல்லா வசதிகளையும் செய்து தரும்படி ஏவலர்களை அனுப்பினான். பாண்டியனும் சோழனும் விடைபெற்றுக்கொண்டு மதுரைக்கு ஏகினர். சுந்தரரும் சேரர்கோனும் திருக்குற்றாலம், திருநெல்வேலி, திருஇராமேச்சுரம் ஆகிய தலங்களைச் சென்று வழிபட்டார்கள். இராமேச்சுரத்திலிருந்தே ஈழ நாட்டிலுள்ள மாதோட்டக் கேதீச்சரத்தை எண்ணித் துதித்துத் திருப்பதிகம் பாடினார் சுந்தரர். அங்கிருந்து புறப்பட்டுத் திருச்சுழியல் என்ற தலத்தை யடைந்து வழிபட்டு அத்தலத்திலேயே தங்கியிருந்தார். அப்பொழுது சிவபெருமான் தம் திருக்கையில் பொற்செண்டும், திருமுடியிற் சூழியமும் உடையராய் நம்பியாரூரரின் கனவிலே தோன்றி, 'யாம் இருப்பது கானப்பேர்' என்று கூறி மறைந்தார். விழித்தெழுந்த சுந்தரர் சேரமான் பெருமாளுக்கும் அதனை அறிவித்துத் திருச்சுழியலிலிருந்து புறப்பட்டுக் கானப்பேர் சென்று வழிபட்டு அங்குச் சிலநாள் தங்கியிருந்தனர். பின் திருப்புனவாயிலை வழிபட்டுச் சோழ நாட்டை யடைந்தனர், பாம்பணிமாநகரில் உள்ள பாதாளீச்சரம் முதலிய திருக்கோயில்களை வழிபட்டுச் சேரமான் பெருமாளுடன் திருவாரூரை அடைந்தனர். காவிரி வெள்ளம் வழிவிட்டது : பலநாட்களுக்குப் பின் சேரமான் பெருமாள் தம் தோழராகிய சுந்தரரைத் தன்னுடைய நாட்டிற்கு எழுந்தருளவேண்டுமென வேண்டிக்கொண்டார். அதற்கிசைந்த சுந்தரர் ஆரூர்ப் பெருமானைப் பணிந்து சேரர்கோனுடன் காவிரியின் தென்கரை வழியே திருக்கண்டியூரை அடைந்தார். ஐயாறு எதிரே தோன்றிற்று. காவிரியாற்றிலோ வெள்ளம் கரை புரண்டோடிற்று. ஆற்றைக் கடந்து ஐயாறு சென்று தொழ நினைந்த சுந்தரர் 'பரவும் பரி சொன்றறியேன்' என்று தொடங்கிப் பதிகம்பாடி ஐயாற்றிறவனை ஆராக் காதலால் அழைத்து நின்றார். பெருமான் கன்று அழைத்தலைக் கேட்ட தாய்ப்
|