பக்கம் எண் :

392
 

பசுபோல் 'ஓலம்' என்று உரக்கக் கூறியருளினார். வெள்ளம் இரு புறமும் ஒதுங்கி நின்று நடுவே வழிகாட்டிற்று. சுந்தரர் சேரர்கோனுடனும் அடியார்களுடனும் ஆற்றைக் கடந்து சென்று வழிபட்டனர். பின்னர் இருபெருமக்களும் பல தலங்களை வணங்கிக் கொண்டு கொங்குநாட்டைக் கடந்து சேர நாடடைந்தனர்.

சேரநாட்டுக் கொடுங்கோளூரை அடைந்த சுந்தரரைச் சேரமான் பெருமாள் சிறந்த முறையில் வரவேற்கச் செய்தார். திருவஞ்சைக்களத்துத் திருக்கோயிலுக்கு அழைத்துச்சென்று தரிசிக்கச் செய்தார். 'முடிப்பது கங்கை' என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி வழிபட்டுப் புறம் போந்தார் சுந்தரர். சுந்தரரைச் சேரமான் பெருமான் பட்டத்து யானைமேல் ஏற்றித் தம் இருகைகளாலும் வெண்சாமரை வீசிக்கொண்டு அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அரியணையில் இருத்தி அருச்சித்தார். உடனிருந்து திருவமுது செய்வித்து உபசரித்தார். பல்வகையாலும் சிறந்த முறையில் சுந்தரரை உபசரித்து மகிழ்ந்து அளவளாவியிருந்தார்.

சுந்தரர்க்குத் திருவாரூர்ப் பெருமானைக் கண்டிறைஞ்சி வழிபடும் விருப்பு விளைந்தது. அந்நினைவு மீதூரப் பெற்ற சுந்தரர், 'ஆரூரானை மறக்கலும் ஆமோ' என்று கூறித் தம் ஆற்றாமையைப் புலப்படுத்தி, சேரமானிடம் விடைபெற்றுக் கொள்ள விழைந்தார். சேரர் கோன் இவ்வரசுரிமையை நீரே ஏற்று நடத்தவேண்டுமென்று இறைஞ்சினார். சுந்தரர் ஆரூர்ப் பெருமான் மேல் உள்ள ஆராக் காதலை வெளிப்படுத்தி விடை பெற்றார். சேரமான் தம் திருமாளிகையிலுள்ள பொருள்களைப் பொதி செய்து உடன் அனுப்பிவைத்தார்.

சுந்தரர் வழி பலவும் கடந்து கொங்குநாட்டுத் திருமுருகன் பூண்டி வழியே செல்லுங்கால், சிவபெருமான் பூதகணங்களை வேடுவராகச் சென்று, வழிப்பறி செய்து வருமாறு பணித்தருள, அவ்வண்ணமே பூதகணங்கள் வேடர்களாய்ச் சென்று அச்சுறுத்திப் பொருள்களைப் பறித்துக்கொணர்ந்தன. இதையறிந்த சுந்தரர் திருமுருகன்பூண்டித் திருக்கோயிலிறைவரை யணுகி, 'எற்றுக்கு இங்கிருந்தீர்' என்ற மகுடத்தோடு பதிகம் பாடிப் பரவினார். கொள்ளையிடப் பெற்ற பொருள்களை வேடுவர்கள் மீளக் கொண்டுவந்து முன்றிலிற் குவித்தனர். அவற்றை முன்போற் பொதி செய்து எடுத்துச் செல்லுமாறு ஏவலர்க்குக் கூறிவிட்டுக் கொங்குநாட்டைக் கடந்து திருவாரூரை அடைந்தார். பரவையார் மாளிகையில் இனிது எழுந்தருளியிருந்தார்.