பக்கம் எண் :

393
 

முதலை யுண்ட பாலனை மீட்டருளல் :

திருவாரூர்ப் பெருமானை வணங்கி மகிழ்ந்திருந்த சுந்தரர், சிலநாட் சென்றபின் சேரமான் பெருமாளை நினைந்து மலைநாடு செல்லத் திருவுளங்கொண்டார். சோழநாட்டைக் கடந்து, கொங்குநாட்டை யடைந்து திருப்புக்கொளியூர் அவிநாசியை அணுகி, திருவீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அங்கே ஒரு வீட்டில் மங்கல ஒலியும், அதன் எதிர் வீட்டில் அழுகையொலியும் எழுதலைக் கேட்டு இவ்வாறு நிகழக் காரணம் யாது என வினவினார். அதுகேட்ட வேதியர்கள் நிகழ்ந்ததைக் கூறினர்.

ஒத்த பருவத்தினராய் ஐந்து வயது நிரம்பப்பெற்ற சிறுவர் இருவர் மடுவில் குளித்தபோது ஒருவனை முதலை விழுங்கியது. மற்றொருவன் பிழைத்தான். பிழைத்த சிறுவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நிகழ்கிறது. இவர்கள் வீட்டில் எழும் மங்கல ஒலி முதலை வாயில் அகப்பட்டிறந்த சிறுவனுடைய பெற்றோர்க்கு, புதல்வனை நினைப்பித்தமையால் அவர்கள் வருந்துகின்றனர் என்று வேதியர் கூறக்கேட்ட சுந்தரர் வேதனைகொண்டார். அந்நிலையில் இறந்த சிறுவனின் பெற்றோர், சுந்தரர் வருகையை அறிந்து முகமலர்ச்சியோடு வரவேற்றனர். தாங்கள் இங்கெழுந்தருளியது எங்கள் தவப்பேறேயாகும் என மகிழ்ந்துரைத்தார்கள். சுந்தரர் இவ்வேதியரும் அவர் மனைவியும் மகனை இழந்த துன்பத்தையும் மறந்து என்னை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கின்றனர், இவர்கள் புதல்வனை முதலைவாயினின்று அழைத்துத் தந்த பின்னரே அவிநாசிப் பெருமானை வழிபடவேண்டுமென்று உறுதிகொண்டார். அம் மடு இருக்கும் மிடத்தைக் கேட்டறிந்து அங்குச் சென்றார். முதலை விழுங்கிய புதல்வனை உயிருடன் கரையில் கொண்டுவந்து தரும்படி அருள்செய்க என இறைவனை வேண்டி, "எற்றான் மறக்கேன்" என்று தொடங்கியத் திருப்பதிகம் பாடினார். "உரைப்பார் உரை" என்னும் நான்காம் திருப்பாடலைப் பாடும்பொழுது இயமன் மடுவிலிருந்த முதலை வயிற்றுள் புதல்வன் உடம்பைச் சென்ற ஆண்டுகளின் வளர்ச்சி யுடையதாகச் செய்து புகுத்தினன். முதலை கரையிலே வந்து தான் முன் விழுங்கிய புதல்வனை உமிழ்ந்தது. புதல்வனைக் கண்ட தாய் தழுவியெடுத்தாள். தாயும் தந்தையும் சுந்தரரை வீழ்ந்து வணங்கினர். இந் நிகழ்ச்சியைக் கண்டோர் அனைவரும் திருவருட்டிறத்தை வியந்தனர். சுந்தரர் சிறுவனை அவிநாசித் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்று இறைவரைத் தொழுது வேதியர் வீட்டிற்கு வந்து மங்கல வாத்தியங்கள் முழங்க உபநயனம் செய்வித்தருளினார்.