பக்கம் எண் :

394
 

திருக்கயிலைக்கு எழுந்தருளல் :

அவிநாசியிலிருந்து சுந்தரர் தம் அன்புடைத் தோழர் சேரமான் பெருமாளைக் காணவேண்டி மலைநாட்டை நோக்கிச் செல்வாராயினார். சேரர்கோன் சுந்தரர் வருகையை அறிந்து வரவேற்று அரியணையிலிருத்தி அருச்சித்துப் போற்றினார். சுந்தரர் சேரமான் பெருமாளுடன் மலைநாட்டுத் தலங்களை வழிபட்டு மகிழ்ந்திருந்தார்.

ஒருநாள் சேரர்கோன் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத்திறைவனை வழிபடச் சென்றார். திருக்கோயிலுக்குட் சென்ற சுந்தரர் நெஞ்சம் நெகிழ்ந்துருகி நிலமிசை வீழ்ந்து 'அடியேன் இவ்வுலக வாழ்வை வெறுத்தேன்; அடியேனை நின் திருவடியில் சேர்த்தல் வேண்டும்' என்னும் குறிப்புடன் 'தலைக்குத் தலைமாலை' என்னும் திருப்பதிகத்தால் விண்ணப்பித்து வேண்டினர். பெருமான் சுந்தரரைத் திருக்கயிலைக்கு மீண்டும் அழைத்துக்கொள்ளத் திருவுளங் கொண்டார். நம்பியாரூரரைத் திருக்கயிலைக்கு அழைத்து வரத் தேவர்கள் பலரையும் திருவஞ்சைக்களத்திற்கு அனுப்பி யருளினார்.

சிவபிரானினருளாணை மேற்கொண்டு வெள்ளையானையுடன் திருவஞ்சைக்களத்துத் திருக்கோயில்வாயிலை அடைந்தனர் தேவர்கள். இறைவனை வழிபட்டுக் கோயில் வாயிலை யடைந்த சுந்தரரை வணங்கி நின்று தேவர்கள் திருக்கயிலைமலைக்கு வருமாறு இறைவனருளிய கட்டளையைத் தெரிவித்தனர். தம்மை மறந்த வன்றொண்டர் இறைவனருளாணையை ஏற்றுக்கொண்டார். தேவர்கள் சுந்தரரை வலம்வந்து அவரை வெள்ளையானை மேலேற்றினர். சுந்தரர் தம் உயிர்த் தோழராகிய சேரமான் பெருமாளைச் சிந்தித்துக் கொண்டே கயிலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

சுந்தரர் திருக்கயிலை செல்வதைத் திருவருளாற்றலால் உணர்ந்த சேரமான் பெருமாள் குதிரைமீதேறித் திருவஞ்சைக்களத்துத் திருக்கோயிலுக்குச் சென்றார். வெள்ளையானைமீது அமர்ந்து விசும்பிற் செல்லும் சுந்தரரைக் கண்டார், தமது குதிரையின் செவியிலே திருவைந்தெழுத்தை ஓதினார். அவ்வளவில் அக்குதிரை வான்வழிசெல்லும் ஆற்றல் பெற்று வெள்ளையானையை வலம் வந்து அதற்கு முன்னே செல்வதாயிற்று.

சேரமான் பெருமாளுடன் வந்த வீரர்கள் தம் அரசரை விசும்பிற் கண்ணுக்குப் புலப்படுமளவு கண்டு, பின் வருந்தினர். தம் உடம்பை