பக்கம் எண் :

395
 

உடைவாளால் வெட்டி வீழ்த்தி வீரயாக்கைபெற்று விசும்பில் சேரர்கோனைச் சேவித்துச் சென்றார்கள்.

சுந்தரர், 'தானெனை முன் படைத்தான்' என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தவாறு திருக்கயிலையை அடைந்து தென்திசை வாயிலை அணுகினார். சேரர்கோனும் சுந்தரரும் தத்தம் ஊர்திகளினின்று கீழிறங்கிப் பல வாயில்களையும் கடந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்தனர். அவ்வாயிலில் சேரர்கோன் உள்ளே செல்ல அனுமதியின்றித் தடைப்பட்டு நின்றார். சுந்தரர், உள்ளே சென்று அம்மையப்பராய பெருமான் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி நின்று, சேரமான் பெருமாள் வருகையை விண்ணப்பித்தார். சிவபிரான் மகிழ்ந்து சேரமானை வரவிடுக என நந்திதேவர்க்குப் பணித்தார். அவரும் இறைவனருளிப்பாட்டைக் கூறிச் சேரமான் பெருமாளை உள்ளே அழைத்து வந்தார். உள்ளேவந்த சேரர்கோனை 'நீ இங்கு நாம் அழையாமை வந்ததேன்' என வினவினார். அதுகேட்ட சேரவேந்தர் அடியேன் ஆரூரர் கழல்போற்றி அவரைச் சேவித்து வந்தேன். திருவருள்வெள்ளம் இங்கு என்னை ஈர்த்து நிறுத்தியது. அடியேன் பாடிய 'திருவுலாப்புறம்' என்ற நூலைச் செவிமடுத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். திருவுலாப்புறத்தை எடுத்துரைத்து அரங்கேற்றினார். பெருமான் அவரை நோக்கிச் சேரனே நீ நம்பியாரூராகிய ஆலால சுந்தரருடன் கூடி நீவிர் இருவீரும் நம் சிவகணத் தலைவராய் இங்கு நம்பால் நிலைபெற்றிருப்பீராக எனத் திருவருள் பாலித்தார்.

இறைவனருளிய வண்ணம் நம்பியாரூரர் அணுக்கத் தொண்டு புரியும் ஆலால சுந்தரராகவும், சேரமான் பெருமாள் சிவகணத் தலைவராகவும் திருக்கயிலையில் நிலைபெற்றுப் பேரின்ப வாழ்வில் திளைத்து மகிழ்ந்தார்கள்.

நம்பியயரூரரை மணந்த பரவையாரும், சங்சிலியாரும் சிவபெருமான் திருவருளால் முறையே கமலினியாராகவும், அநிந்திதையாகவும் ஆகி உமையம்மைக்குத் தாங்கள் செய்துவந்த அணுக்கத் தொண்டை மேற்கொண்டு மகிழ்ந்தார்கள்.

சுந்தரர், வெள்ளையானையிலமர்ந்து திருக்கயிலையை நோக்கிச் சென்றபொழுது பாடிய "தானெனைமுன் படைத்தான்" என்ற திருப்பதிகத்தை, வருணனிடத்துக் கொடுத்தருள அவன் அத் திருப்பதிகத்தினைத் திருவஞ்சைக் களத்தில் கொண்டுவந்து சேர்ப்பித்தான்.