அவருடைய வரலாறு அமைந்துள்ளது. நாவலூரன் என்று தம்மைப் பல இடங்களிலும் குறித்துக் கொள்வதால் ஊரையும், சடையன்தன் காதலன் (தி. 7 ப. 58 பா. 10) இசைஞானி சிறுவன் (தி. 7 ப. 16 பா. 11) என்று பெற்றோர் பெயரைக் குறிப்பிடுவதால் பெற்றோரையும், மறையார்தங்குரிசில் (தி. 7 ப. 25 பா. 10) என்று மரபு கூறிக் கொள்வதால் மரபையும் தம்மைப் பல இடங்களிலும் ஆரூரன் என்றே குறிப்பிடுவதால் இயற்பெயர் நம்பியாரூரர் என்பதனையும் அறியலாம். இவருடைய தாயார் திருவாரூரில் பிறந்தவர். மேலும் சுந்தரருடைய பாட்டனார் ஆவணத்தில் ஆரூரன் என்று குறித்துள்ளார். ஆதலால் சுந்தரர்க்கு ஆரூரன் என்றே பெற்றோர் பெயரிட்டனர். நம்பி என்பது ஆண்மக்களுள் சிறந்தாரை அழைக்கும் பெயர். அரசிளங்குமரராய் வளர்ந்தது : திருநாவலுரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்கமுனையரையன் என்னும் மன்னன் சடையனார்பால் நம்பியாரூரரை வேண்டிப்பெற்று அரசிளங்குமரனாக ஆதரித்து வளர்த்தார். "நாதனுக் கூர்நமக் கூர்நர சிங்க முனையரையன் ஆதரித் தீசனுக்கு ஆட்செயு மூர்அணி நாவலூர் என்று ஓதநற் றக்கவன் றொண்டன்ஆ ரூரன்" (தி. 7 ப. 17 பா. 11) "நாடெலாம் புகழ் நாவலூராளி நம்பிவன்றொண்டன்" (தி. 7 ப. 64 பா. 10) "வேந்தராயுலகாண்டு அறம் புரிந்து வீற்றிருந்த இவ்வுடல்" (தி. 7 ப. 64 பா. 6) இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பெற்றது : நம்பியாரூரர்க்குத் திருமணம் நிகழவிருக்கும் நற்பொழுதில் சிவபிரான் முதிய வேதியராய்த் தோன்றி ஆளோலை காட்டி ஆட்கொண்ட செய்தி பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளன.
|