"நிலைகெட விண்ணதிர நிலமெங்கு மதிர்ந்தசைய மலையிடை யானையேறி வழியே வருவே னெதிரே அலைகட லாலரையன் அலர்கொண்டு முன்வந்திறைஞ்ச" (தி. 7 ப. 100 பா. 7) "வரமலிவாணன் வந்து வழிதந்தெனக் கேறுவதோர் சிரமலியானை தந்தான்" (தி. 7 ப. 100 பா. 8) இந்திரன்மால் பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான் நந்தமர் ஊரன்என்றான் நொடித்தான்மலை யுத்தமனே. (தி. 7 ப. 100 பா. 9) வருணன் திருப்பதிகத்தை வெளிப்படுத்தியது: சுந்தரர் பாடிய நொடித்தான்மலைத் திருப்பதிகத்தை வருணனிடம் கொடுத்தருள அவன் அத்திருப்பதிகத்தைத் திருவஞ்சைக்களத்தில் கொண்டு வந்து சேர்ப்பித்தனன். இதற்குரிய அகச்சான்று, ஊழிதோறூழி முற்றும் உயர்பொன் நொடித்தான்மலையைச் சூழிசையின் கரும்பின்சுவை நாவலவூரன் சொன்ன ஏழிசையின் றமிழால் இசைந்தேத்திய பத்தினையும் ஆழிகடலரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே. (தி. 7 ப. 100 பா. 10) சேரர்கோன் திருக்கயிலை சென்றது: சேரமான் பெருமாள் சுந்தரருடன் கயிலை சென்றனர் என்ற வரலாறு, நம்பியாண்டார் நம்பிகள் வாய்மொழிகளால் விளங்குகிறது. திருவிசைப்பாப் பாடற் பகுதியும் இதனை வலியுறுத்தும். "சேரற்குத் தென்னா வலர்பெருமாற்குச் சிவனளித்த வீரக் கடகரிமுன்புதம் பந்தி யிவுளி வைத்த வீரற்கு.." - தி. 11 திருத்தொண்டர் திருவந்தாதி, 86
|