பக்கம் எண் :

426
 

அருளிய இறைவன் அருளாணையின் வண்ணம், பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 தடுத்தாட்கொண்ட புராணம். 70 - 74)

குறிப்பு: இத்திருப்பதிகம், சிவபிரானை நோக்கி, "அடியேன் உனக்கு முன்பே ஆளாகி, இப்பொழுது நீ வந்து என்னை உனக்கு அடியான் என்று சொல்லியபொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது தகுமோ" என இரங்கி அருளிச்செய்தது.

பண்: இந்தளம்

பதிக எண்: 1

திருச்சிற்றம்பலம்

1.

பித்தாபிறை சூடீபெரு

மானேயரு ளாளா

எத்தான்மற வாதேநினைக்

கின்றேன்மனத் துன்னை

வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்

நல்லூரருட் டுறையுள்

அத்தாஉனக் காளாய்இனி

அல்லேனென லாமே.

1

 

1. பொழிப்புரை: பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய, 'அருட்டுறை' என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, 'உனக்கு அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை: பொருளியைபுக்கேற்பத் திருப்பாடல்களுள் மொழிமாற்றி உரைக்கப்படுமாற்றை அறிந்துகொள்க.

பித்தன் - பேரருள் உடையவன்; பேரருள் பித்தோடு ஒத்தலின், 'பித்து' எனப்படும். எனவே, பேரருள் உடைய சிவபெருமானுக்கே, 'பித்தன்' என்னும் பெயர் உரியதாயிற்று.

இனி, 'சிவபெருமான்' பிறர்வயம் இன்றித் தன்வயம்