உடைமையாற் செய்யுஞ் செயல்கள் பிறரால் அறிதற்கு அரிய நெறியினவாய், ஒரு நெறிப்படாத பித்தர் செயலோடு ஒத்தல் பற்றியும் அவன், 'பித்தன்' எனப்படுவன் என்ப. அச்செயல்களாவன, 'வேண்டப்படுவதனைச் செய்தல், செய்யாமை, வேறொன்று செய்தல்' என்பன. இவற்றை முறையே, 'கர்த்திருத்துவம், அகர்த்திருத்துவம், அந்யதாகர்த்திருத்துவம்' என்பர். எனவே, 'பித்தன்' என்றது, பின்வரும், "பெருமான் (பெருமையுடையவன் - தலைவன்)" என்றதன் காரணத்தைக் குறிப்பால் உணர்த்தியவாறாயிற்று. "பிறைசூடி" என்றதும், "பித்தன்" என்றதனாற் பெறப்பட்ட பேரருளை ஆளுந்தன்மைக்குச் சான்றாய், பின்வரும், "அருளாளன்" என்பதன் காரணத்தை அங்ஙனம் உணர்த்தியதேயாம். தக்கனது சாபத்தால் இளைத்து வந்த சந்திரனை அவன் அழியாதவாறு காக்க அவனது ஒரு கலையைச் சிவபெருமான் தனது முடியிற் கண்ணியாகச் சூடிக்கொண்டமையால் அஃது அவனது பேரருளுக்குச் சான்றாயிற்று. அருட்டுறைப் பெருமான் சுவாமிகளை நோக்கி, "முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே - என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்" (தி. 12 பெ. புரா. தடுத். 73) என்று அருளினமையின், இத்திருப்பதிகத்தின் முதற்சொல்லாகிய, 'பித்தா' என்பது, இறைவன் அளித்த சொல்லாதல் வெளிப்படை. இனி, 'அச்சொல்லை இறைவன் முன்னை ஆசிரியரது திருமொழியினின்றே எடுத்து அளித்தனன்' என்பது, அச்சொல்லை அடுத்து சுவாமிகளது பயிற்சி வாயிலாகத் தோற்றுவித்த, "பிறைசூடி" என்னும் தொடரால் பெறப்படும். அஃது எங்ஙனம் எனின், "பித்தா பிறைசூடீ" என்னும் தொடர், திருஞானசம்பந்த சுவாமிகளது திருப்பாடலிடத்து முன்பு தோன்றி விளங்குதலின் என்க. அத்தொடர் அமைந்த அவரது திருப்பாடல்: விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே
(தி. 1. ப. 89 பா. 3)
வன்றொண்டப் பெருமானாரை இங்ஙனம் முன்னை ஆசிரியர்
|