திருமொழிவழியே நின்று பாடுமாறு திருவருள் செய்தது, இவரை, முன்னை ஆசிரியர்களது பெருமையையும், அவர்களது, திருமொழிப் பெருமையையும் இனிது விளக்கி அடியார்க்கு அடியாராம் வழிநிலை ஆசிரியராகுமாறு செய்யும் குறிப்பினைப் புலப்படுத்தவாறாம். முன்னை ஆசிரியராவார் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும். அதனை இவர், "நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரசனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானை"
(தி. 7 ப. 67 பா. 5) என்று குறித்தருளுவார். அத் திருப்பாடலிற்றானே, "தொண்ட னேன்அறி யாமை யறிந்து | கல்லியல்மனத் தைக்கசி வித்துக் | கழலடி காட்டிஎன் களைகளை யறுக்கும் | வல்லியல் வானவர் வணங்கநின் றானை" |
என்று, தம்மை இறைவன் வழிநிலை ஆசிரியராக்கினமையையும் குறிப்பால் அருளிச்செய்வர். அங்ஙனம் இவர் அருளிச்செய்வதற்கு ஏற்ப, இவரைத் திருவாரூரில் இறைவன் தன் அடியார்க்கு அடியராகச் செய்து, திருத்தொண்டத் தொகை பாடுவித்தமையையும், அது பற்றிப் பின்னரும் இவர்,
"நாவின்மிசை யரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன் யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன்" (தி. 7 ப. 78 பா. 10) எனத் தம்மைக் குறித்தருளினமையையுங் காண்க. ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் ஆகிய அவ்விருவர்க்கு முன்னரும் ஆசிரியர் உளராயினும், ஓரிடத்தில் நில்லாது பலவிடத்தும் சென்று திருப்பதிகம் அருளிச்செய்து திருவருள் நெறியைப் பரப்பும் தொண்டினை அவ்விருவர் வாயிலாகவே நிகழச் செய்தமையால், பேராசிரியப் பெருந்தன்மையை அவ்விருவரிடத்தே இறைவன் வைத்தானாவன். அதனைத் திட்பமுற உணர்ந்தே சேக்கிழார் நாயனார், அவ்விருவரையே, "பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற புண்ணியக் கண் ணிரண்டு" (தி. 12 பெ. புரா. திருநாவு. 185) என வரையறுத்து
|