பக்கம் எண் :

429
 

அருளிச் செய்தார். அவ்வாசிரியர்வழி நிற்பிக்கப்பட்ட இச்சுவாமிகளை இறைவன் முதற்கண், "மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக" என்றும், பின்னரும், "இன்னும் பல்லாறுலகினில் நம்புகழ் பாடு" என்றும், (தி. 12 பெ. புரா. தடுத். 70, 76) ஓரிடத்தில் நில்லாது பலவிடத்தும் சென்று பாடப் பணித்தமையால், ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பேராசிரியராயது எவ்வாறு என்பது இனிது விளங்கும். இனி, செல்லும் இடங்களில் எல்லாம் ஞானசம்பந்தரைச் சிவிகை, சின்னம் முதலியவைகளுடன் செல்லச் செய்தமையால், அவ்விருவருள்ளும் தலைமைத் தன்மையை இறைவன் ஞானசம்பந்தரிடத்து வைத்தமை புலனாகும். இவற்றானே, நால்வர் ஆசிரியருள் ஞானசம்பந்தர் முதலிய மூவரையும் முதற்கண் வேறு வைத்து, "மூவர் முதலிகள்" என வழங்குமாறும் இனிது என்பது பெறப்பட்டது.

இனி, பலவிடத்தன்றிச் சிலவிடத்துச் சென்று இறைவன் பொருள்சேர் புகழை மிகப்பாடிய அருளாசிரியர் திருவாதவூரடிகளேயாதலின், அவர் நான்காம் ஆசிரியர் ஆயினார் என்க. அன்றியும், மூவர் தமிழும் இசைத் தமிழாயும், அடிகள் தமிழ் இயற்றமிழாயும் இருத்தல் கருதத் தக்கது. உளங் குளிர்ந்த போதெலாம் உகந்துகந்து பாடி அன்பு மீதூர்ந்து இன்புறும் அன்புப் பாடல்களுக்கு இயற்றமிழினும், இசைத்தமிழே சிறந்து நிற்பது என்பது,

"கோழைமிட றாககவி கோளும்இல வாகஇசை கூடும்வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும்ஈசன்"

(தி. 3 ப. 71 பா. 1)

எனவும்,

"கீதம்வந்த வாய்மையாற் கிளர்தருக்கி னார்க்கலால்
ஓதிவந்த வாய்மையால் உணர்ந்துரைக்க லாகுமே"

(தி. 3 ப. 52 பா. 7)

எனவும்,

"அளப்பில கீதம்சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே"

(தி. 4 ப. 77 பா. 3)

எனவும் போந்த ஆசிரியத் திருமொழிகளால் பெறப்படும். இத்துணையும் இத்திருப்பதிகத்தின் தொடக்கத்தால் அறியற்பாலவாயின என்க.