பக்கம் எண் :

430
 
2.

நாயேன்பல நாளும்நினைப்

பின்றிமனத் துன்னைப்

பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற

லாகாவருள் பெற்றேன்

வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்

நல்லூரருட் டுறையுள்

ஆயாஉனக் காளாய்இனி

அல்லேன்என லாமே.

2

 

'எதனால்' என்பது, "எத்தால்" என மருவிற்று. 'எத்தாலும்' என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. "வைத்தாய்" என்பதன்பின், 'அதனால்' என்னும் சொல்லெச்சம் வருவிக்க. வைத்தது தவங் காரணமாக என்க. "திருவெண்ணெய்நல்லூர்" என்பது தலத்தின் பெயர்; "அருட்டுறை" என்பது கோயிலின் பெயர். 'இப்பொழுது அல்லேன் எனல் ஆமே' என்றதனால், 'ஆளாயது முன்பே' என்பது போந்தது. 'முன்பு' என்றது, திருக்கயிலையில் இருந்த காலத்தை. "ஆமே" என்ற ஏகார வினா, 'ஆகாது' என எதிர்மறைப் பொருள்தந்து நின்றது.


வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்
எதிர்மறுத் துணர்த்துதற் குரிமையு முடைத்தே

(தொல். சொல். 246)

என்ப து இலக்கணமாதலின் இத்திருப்பாடல், சுவாமிகள் தம் முன்னை நிலையை நினைந்து அருளிச்செய்தது.

2. பொ-ரை: மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும் மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன்; ஆயினும், இதுபோழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

கு-ரை: "கிழக்கிடும் பொருளோ டைந்து மாகும்" (தொல். பொருள். 276) என்றவாறு, இழிவு மிகுதிக்கு உவமை கூறுங்கால் நாயைக் கூறுதல் வழக்காதல் பற்றி, "நாயேன்" என்று அருளினார்.