பக்கம் எண் :

446
 
16.தென்னாத்தெனாத் தெத்தெனா என்றுபாடிச்

சில்பூதமும் நீருந் திசைதிசையன

பன்னான்மறை பாடுதிர் பாசூருளீர்

படம்பக்கங்கொட் டுந்திரு வொற்றியூரீர்

பண்ணார்மொழி யாளையொர் பங்குடையீர்

படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியீர்

அண்ணாமலை யேன்என்றீர் ஆரூருளீர்

அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

6



கு-ரை: "புலால் வாயன பேய்" என்றது, பிணந்தின்னும் பேய்களை. அவற்றைக் கூறியது, புறங்காட்டது இயல்பு குறித்தவாறு. பூச்சு - பூசல்; ஆரவாரம். எல்லி - இரவு.

"கடம்பூர்க் கரக்கோயில்" என்றது, நிலவுலகத் தலங்கள் பலவற்றையும் குறித்தற்கு, ஒன்றை எடுத்தோதியவாறு. விரகு - அறிவு, அஃது அறிந்து நீங்குதலாகிய தன் காரியம் தோன்ற நின்றது.

6. பொ-ரை: இறைவரே, 'தென்னாத்தெனாத் தெத்தெனா' என்று பாடுகின்ற சில பூதங்களும், அவற்றின் செயல்களும் உம்மைச் சூழ்ந்த பல திசைகளிலும் உள்ளன. ஆயினும், நீர், பலவாகிய நான்கு வகைப்பட்ட வேதங்களைப் பாடுவீர்; திருப்பாசூரில் இருக்கின்றீர் எனினும், 'படம் பக்கம்' என்னும் பறையைக் கொட்டும் தலமாகிய திருவொற்றியூரீராய்த் தோன்றுகின்றீர். பண் போலும் மொழியினை யுடைய உமையை ஒரு பாகத்தில் நீங்காது கொண்டு, குடி வாழ்க்கையீராய்க் காணப்படுகின்றீர் ஆயினும், புறங்காட்டிடத்தில் பற்று நீங்கமாட்டீர். 'அண்ணாமலை யிடத்தேன்' என்றீர் ஆயினும், ஆரூரில் இருக்கின்றீர் அதனால், உம்மை ஒருதலையாகத் துணிதல் கூடாமையால், அடியோங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுவேம்.

கு-ரை: 'தென்னாத்தெனாத் தெத்தெனா' என்றது, இசைக்குரிய வண்ணவகையே யாயினும், உடனிலை வகையால், வாயில் வந்தபடி பாடுதலையுங் குறித்தது.

படுகாடு - யாவரும் அழியும் காடு. "அண்ணாமலையேன்" என்றது வேறு முடிபாகலின், பால்வழு வின்றாயிற்று. 'அண்ணா மலையேம்' என்றே பாடம் ஓதுதலும் ஆம்.