பக்கம் எண் :

450
 
21.அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமென்

றமரர்பெரு மானையா ரூரன்அஞ்சி

முடியால்உல காண்டமூ வேந்தர்முன்னே

மொழிந்தாறுமோர் நான்குமோ ரொன்றினையும்

படியாஇவை கற்றுவல் லவடியார்

பரங்குன்றமே யபர மன்னடிக்கே

குடியாகிவா னோர்க்கும்ஓர் கோவுமாகிக்

குலவேந்தராய் விண்முழு தாள்பவரே.

11

திருச்சிற்றம்பலம்


"பார், விண்" என்றது உலகங்களையும், "நெடுவெள்ளிடை நிலன்" என்றது, அவற்றிற்கு முதலாகிய பூதங்களையும் என்க. உம்மையையும், 'ஆகி' என்பதனையும் செய்யுள் நோக்கி, ஏற்ற பெற்றியான் விரித்தும் தொகுத்தும் அருளியவாறு. 'பத்தும்' என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. "ஆர்" என்றது, ஆகுபெயர்.

11. பொ-ரை: தேவர் பெருமானாகிய சிவபெருமானிடத்தில் அச்சங்கொண்டு, நம்பி ஆரூரன், முடியொடு நின்று உலகத்தை ஆள்கின்ற மூவேந்தர் முன்னிலையில், 'அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும்' என்று சொல்லிப் பாடிய இப்பதினொரு பாடல்களையும், இவையே தமக்கு நெறியாகும்படி ஓதி உணர வல்ல அடியார்கள், திருப்பரங்குன்றத்தை விரும்பி எழுந்தருளியுள்ள அப்பரமனது திருவடி நிழலிலே வாழ்கின்றவராய், அரசர் குடியில் தோன்றிய அரசரோடு ஒருங்கொத்து மண் முழுதும் ஆண்டு, பின் தேவர்க்கும் ஒப்பற்ற அரசராகி விண் முழுதும் ஆள்பவரே ஆவர்.

கு-ரை: "மொழிந்த" என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. திருகடைக்காப்பினையும் ஒழியாது ஓதுதல் வேண்டும் என்பார், 'பதினொன்றும்' என்பது வரக் கூறினார். படி - முறை; நெறி. 'இவ்வுலகத்திலே இறைவனது திருவடி இன்பத்தைப் பெறுவர்' என்றற்கு, "பரமன் அடிக்கே குடியாகி" என முதற்கண் அருளினமையின், அதனை மீள இறுதிக் கண் அருளாது, "விண்முழு தாள்பவரே" என்று போயினார். "கோ" என்றது, பன்மை யொருமை மயக்கம். "வானோர்க்கும்" "கோவும்" என்னும் உம்மைகள், சிறப்பு. "குலவேந்தராய்" என்பதில் உள்ள ஆக்கச் சொல் ஒப்புமை குறித்து நின்றது.