பக்கம் எண் :

451
 

3. திருநெல்வாயில் அரத்துறை

பதிக வரலாறு :

நம்பியாரூரர் திருவாமாத்தூரிறைவரைப் பணிந்து தொண்டை வளநாடு கடந்து நீர்நாட்டின் அருகில் திருஅரத்துறையை அடைந்து இறைவனைப் பணிந்து பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன் கலிக்காம நாய. புராணம் - 294)

குறிப்பு: இத்திருப்பதிகம், உலகத்தின் நிலையாமையை எடுத்தோதி; 'அடியேனை அதனினின்றும் உய்யக்கொள்ளுதல் வேண்டும்' என்று இரந்து, மற்றொரு கண்ணை வேண்டுதல் மேலும் நோக்குடையதாக அருளிச்செய்தது.

பண்: இந்தளம்

பதிக எண்: 3

திருச்சிற்றம்பலம்

22.

கல்வாய்அகி லுங்கதிர் மாமணியுங்

கலந்துந்தி வருந்நிவ வின்கரைமேல்

நெல்வாயி லரத்துறை நீடுறையுந்

நிலவெண்மதி சூடிய நின்மலனே

நல்வாயில்செய் தார்நடந் தார்உடுத்தார்

நரைத்தார்இறந் தார்என்று நானிலத்தில்

சொல்லாய்க்கழி கின்ற தறிந்தடியேன்

தொடர்ந்தேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

1

 

1. பொ-ரை: மலையிடத்துள்ள அகில்களையும், ஒளியை யுடைய மாணிக்கங்களையும் ஒன்று கூட்டித் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள திருநெல்வாயில் அரத் துறையின் கண் என்றும் எழுந்தருளியிருக்கும், நிலவினையுடைய வெள்ளிய பிறையைச் சூடிய மாசற்றவனே, உலகியலில் நின்றோர் அனைவரும், 'நல்ல துணையாகிய இல்லாளை மணந்தார்; இல்லற நெறியிலே ஒழுகினார்; நன்றாக உண்டார்; உடுத்தார்; மூப்படைந்தார்; இறந்தார்' என்று உலகத்தில் சொல்லப்படும் சொல்லை உடையவராய் நீங்குவதன்றி நில்லாமையை அறிந்து உன்னை அடைந்தேன்; ஆதலின், அடியேன் அச்சொல்லிலிருந்து பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.