பக்கம் எண் :

459
 

தெருக்களில் நல்ல மாடமாளிகைகள் நிறைந்த, தென்னாட்டில் உள்ள திருநாவலூரில் உள்ளவர்க்குத் தலைவனும், சிவபெருமானுக்கு அடித் தொண்டனும் ஆகிய அழகிய ஆரூரன் பாடிய, நல்ல தமிழ் மொழியினால் ஆகிய உயர்ந்த பாமாலையின்கண் உள்ள பத்துப் பாடல்களாகிய இவற்றைக் கற்று உணரவல்லவர், கருமை மிக்க, களிப்பினை உடைய வண்டுகள் ஒலிக்க வருகின்ற யானையை உடைய மன்னர்களாகி மண்ணுலகம் முழுதும் ஆண்டு, பின் தேவர்க்குத் தலைவராய் ஒப்பற்ற விண்ணுலகம் முழுதும் ஆள்பவர் ஆவர்.

கு-ரை: 'நாவ லூர்' என்னும் இருபெயரொட்டின்கண் 'நாவல்' என்னும் ஒரு பெயரைப் பிரித்தோதினார், 'மா, பலா' என்றல்போல. 'அணி ஆரூரன்' என்றருளியதனால், 'ஆரூரன்' என்றது ஊரால் வந்த பெயராயிற்று. 'அடித்தொண்டு பண்ணி' என்ற ஒரு பாடமும் உண்டு. வண்டுகள், மதநீரில் மொய்ப்பன என்க. "மன்னராகி" என்றதனால், 'தேவர்க்குத் தலைவராகி' என்பதும், "விண்முழுது ஆள்பவர்" என்றதனால், 'மண்முழுது ஆள்பவர்' என்பதும் பெறப்பட்டன.

திருத்தொண்டர் புராணம்

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

அந்நாட்டின் மருங்கு திரு

வரத்துறையைச் சென்றெய்தி

மின்னாரும் படைமழுவார்

விரைமலர்த்தாள் பணிந்தெழுந்து

சொன்மாலை மலர்க்கல்வா

யகிலென்னும் தொடைசாத்தி

மன்னார்வத் திருத்தொண்ட

ருடன் மகிழ்ந்து வைகினார்.

- சேக்கிழார். 294