பக்கம் எண் :

46
 

என்பன போன்ற பாடல்களால் தம்பிரான் தோழர் என்ற பெருமைக்குரியவராய்த் தாம் வாழ்ந்ததை அவர் உணர்த்தியருளுகிறார்.

சங்கம வழிபாட்டின் சிறப்பை, நாயன்மார்களின் பெருமையை, உலகிற்கு அறிவுறுத்திய பெருமைக்குரியவர் சுந்தரர்.

'ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே'

(தி. 7 ப. 52)

எனவும்

'ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன்
அடியவர்க்கடியனும் ஆனேன்'

(தி. 7 ப. 14 பா. 11)

எனவும்

திருத்தொண்டத் தொகையுள் 'அடியார்க்கு அடியேன்' எனவும் கூறும் சுந்தரர் தேவாரப் பாடல்கள், அடியார் வழிபாட்டின் சிறப்பை நமக்கு உணர்த்துவன. சிவனடியார்களின் வரலாறுகளைச் சுந்தரர் திருத்தொண்டத் தொகையிலும் பிற தேவாரப் பாடல்களிலும் விளங்கக் கூறியுள்ளார்.

திருநாவுக்கரசரை,


'இணைகொள் ஏழெழு நூறு இரும்பனுவல்
ஈன்றவன் திருநாவினுக் கரையன்'

(தி. 7 ப. 65 பா. 2)

என அவரருளிய தேவாரத் தொகையையும் குறிப்பிட்டு அருளியுள்ளார். அடியவர்கள் குற்றம் செய்யினும் குணம் எனக் கொள்ளும் இறைவனியல்பினை,

'நற்றமிழ் வல்ல ஞானசம் பந்தன் நாவினுக் கரையன்

நாளைப் போவானும்,

கற்ற சூதன் நற்சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என் றிவர்கள்,

குற்றம் செய்யினும் குணமெனக் கருதுங் கொள்கை கண்டு

நின்குரை கழல் அடைந்தேன்"

(தி. 7 ப. 55 பா. 4)

எனக் குறிப்பிட்டுள்ளார்.