40. | பிடிக்குக்களி றேஒத்தி யால்எம்பிரான் | | பிரமற்கும் பிரான்மற்றை மாற்கும்பிரான் | | நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச் | | சிலைதொட்டவ னேஉனை நான்மறவேன் | | வடிக்கின்றன போற்சில வன்றிரைகள் | | வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண் | | டடிக்குங்கட லங்கரை மேல்மகோதை | | அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. | | 9 |
கு-ரை: 'இனி எனக்கு அருள்பண்ணத் தகும்' என்பது குறிப்பெச்சம். இலங்கைக்கு இறையை நெரித்தமையும், பிரமன் தலையை அறுத்தமையும் வினைத் தொடக்கை அறுத்தற்கும், நஞ்சுண்டமை அருள்பண்ணுதற்கும் எடுத்துக்காட்டியவாறு. செவியைச் சிறப்பித்தது, தம் முறையீட்டைக் கேட்டருளல் வேண்டும் எனற் பொருட்டு; 'வேதியன்' என்றதும் அதுபற்றி 9. பொ-ரை: மூன்று அரண்கள், ஒருமுறை கைந்நொடிக்கும் அளவிலே எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனே, முத்துக்கள் முதலியவற்றை வடித்தெடுத்துச் சேர்ப்பனபோல, சில வலிய அலைகள் அவைகளை ஈர்த்து வந்து வீசி, வலம்புரிச்சங்கினால், கரையிலுள்ளாரைத் தாக்குகின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள அழகிய சோலைகளையுடைய, 'திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ பெண் யானைக்கு ஆண்யானை போல உயிர்கட்கு யாண்டும் உடன்செல்லும் துணைவனாய் உள்ளாய்; என் போலும் மக்கட்கும், பிரமன் திருமால் முதலிய தேவர்கட்கும் தலைவனாய் உள்ளாய்; இவற்றையெல்லாம் உணர்ந்து, அடியேன் உன்னை மறத்தல் ஒழிந்தேன். கு-ரை: 'ஆதலின், எனக்கு அருள்பண்ண இனித்தடை என்னை?' என்பது குறிப்பு. "பிடிக்குக் களிறே ஒத்தியால்" என்பது மறுபொருள் உவமம்; வலிமை நிலைக்களமாக வந்தது (தொல் - பொருள் - 275). 'பிடிக்குங் களிறே' என்பதும் பாடம். புரம் எரித்தமை பாசத்தை அறுத்தலையும், மக்கட்கும் தேவர்க்கும் தலைவனாயிருத்தல் இன்பம் வழங்குதலையும் வலியுறுத்தும். இறைவன் இயல்பினை இவ்வாறு உணர்ந்து, அவனை மறவாது நிற்றலே, அவனது அடிநிழலை அடையும் நெறியாகும் என்பது, "அயரா அன்பின் அரன் கழல் செலுமே" என்னும் சிவஞான போத (சூ. 11)த்தால் அறியப்படும்.
|