41. | எந்தம்மடி களிமை யோர்பெருமான் | | எனக்கென்றும் அளிக்கும் மணிமிடற்றன் | | அந்தண்கட லங்கரை மேல்மகோதை | | அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனை | | மந்தம்முழ வுங்குழ லும்மியம்பும் | | வளர்நாவலர் கோன்நம்பி ஊரன்சொன்ன | | சந்தம்மிகு தண்தமிழ் மாலைகள்கொண் | | டடிவீழவல் லார்தடு மாற்றிலரே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: என்போலும் அடியவர்கட்கு முதல்வனும், தேவர்கட்குத் தலைவனும், எனக்கு எஞ்ஞான்றும் அருள்பண்ணும் சிவனும் ஆகிய, அழகிய குளிர்ந்த கரையின் கண்ணதாகிய, 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள, 'திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையை, மத்தளமும் வேய்ங்குழலும், 'மந்தம்' என்னும் அளவாக இயம்பப்படுகின்ற, நன்மை வளர்கின்ற திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் போற்றிய இசை நலம் மிக்க, தமிழ்ச்சொற்கள் என்னும் மலர்களால் இயன்ற இம்மாலைகளை வாயிலாகக்கொண்டு அப்பெருமானது திருவடிகளில் பணிய வல்லவர் நிலையாமை நீங்கப் பெற்று, நிலைபேறுடையவராவர். கு-ரை: "அடிகள்" முதலிய மூன்று பெயர்களும், "அப்பன்" என்பதனோடு தனித்தனியாக தொகைநிலை வகையான் இயைந்தன. இனி அவை ஒருபொருண்மேற் பல பெயர்களாய் நிற்ப, அவ்விடத்து ஐயுருபுகள் தொகுத்தலாயின எனலுமாம். 'மணிமிடற்றன்' என்பது 'சிவன்' என்னும் சிறப்புப் பெயரளவினதாய் நின்றது. 'குரல், துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி' என்னும் ஏழிசைகளையும், 'தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி' என்னும் ஐவகைக் கருவிகளினின்றும் எழுப்புமிடத்து, 'மந்தம், மத்திமம், உச்சம்' என்னும் மூவகை நிலையால் எழுப்பப்படுமாகலின், அவற்றுள் மெல்லிதாகிய மந்தம் இயம்புதலை எடுத்தோதியருளினார். மந்தம் மெலிவும், மத்திமம் சமமும், உச்சம் வலிவுமாகும். 'ஞானசம்பந்தன்' என்பதனை, 'சம்பந்தன்' என்றாற்போல, 'ஆருரன்' என்பதனை, 'ஊரன்' என ஒரு சொற் குறைத்து அருளிச்செய்தார்; இவ்வாறு இனியும் பலவிடத்து அருளிச் செய்தலைக் காணலாம்.
|