51. | ஓவ ணம்மேல் எருதொன் றேறும் | | ஓண காந்தன் தளியு ளார்தாம் | | ஆவ ணஞ்செய் தாளுங் கொண்ட | | வரைது கில்லொடு பட்டு வீக்கிக் | | கோவ ணம்மேற் கொண்ட வேடம் | | கோவை யாகஆ ரூரன் சொன்ன | | பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப் | | பறையுந் தாஞ்செய்த பாவந் தானே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: நீக்கப்படும் தன்மையை ஏற்றுள்ள ஒற்றை எருதை ஊர்தியாகக் கொள்ளும், திருவோணகாந்தன்தளியில் வாழ்கின்ற இறைவர், நம்பியாரூரனை, தாமே பத்திரம் எழுதிக் கொண்டுவந்து ஆட்கொண்ட எல்லைக்கண், துகிலும் பட்டும் உடுத்திருந்து, பின்பு அவர் ஆணைவழியே அவரை அவன் அணுகிப் பாடுதலாகிய தொண்டினைச் செய்யும் எல்லைக் கண் கோவண மட்டிலே உடையவராய் நின்ற கோலத்தின் தன்மைகள் பலவும் நிரல்படத் தோன்றுமாறு அமைத்து அவன்பாடிய, பா வடிவாகிய இத் தமிழ்ச் செய்யுள்கள் பத்தினையும் பொருளுணர்ந்து அன்பு மீதூரப் பண்ணொடு நன்கு பாடவல்லவர்க்கு அவர் செய்த பாவம் விரைந்து நீங்கும்.
கு-ரை: ஓ வணம் - ஓவு வண்ணம். 'ஆளுங்கொண்டு அரை துகிலொடு' என்பது பாடமாகாமை யறிக. 'வல்லார்' என்பதும் பாடம் அன்று என்க. பாவங்கள் அனைத்தையும், இனம் பற்றி ஒருமையாக அருளினார்.
திருக்களிற்றுப்படியார் மோக மறுத்திடின்நாம் முத்தி கொடுப்பதென ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத் - தோகையார்பால் தூதாகப் போகவிடும் வன்றொண்டன் தொண்டுகளை யேதாகச் சொல்லுவேன் யான். - உய்யவந்த தேவநாயனார்.
|
|