| மண்ணு ளீராய் மதியம் வைத்தீர் | | வான நாடர் மருவி ஏத்த | | விண்ணு ளீராய் நிற்ப தென்னே | | வேலை சூழ்வெண் காட னீரே. | | 4 |
56. | குடமெ டுத்து நீரும் பூவுங் | | கொண்டு தொண்டர் ஏவல் செய்ய | | நடமெ டுத்தொன் றாடிப் பாடி | | நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம் | | வடமெ டுத்த கொங்கை மாதோர் | | பாக மாக வார்க டல்வாய் | | விடம்மி டற்றில் வைத்த தென்னே | | வேலை சூழ்வெண் காட னீரே. | | 5 |
யுடைய பாட்டுக்களாகியும், அடியார்களது உள்ளத்தில் நிறைந்தும், மக்கள் முதலிய உயிர்களின் கண்களாகியும், உம்மை உள்ளத்தில் நினைபவர், புறத்தேயும் காணும்படி உருவங் கொண்டும் இருத்தல் என்? கு-ரை : செய்யுட்கு ஏற்பப் பிறவாற்றான் அருளிச்செய்தாராயினும், ஏனைய திருப்பாடல்களோடு ஒப்ப இவ்வாறு உரைத்தலே திருவுள்ளம் என்க. மதியம் வைத்தல், உருவத்தின் வகைகளைக் குறிக்கும் குறிப்பு. 5. பொ-ரை: கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, அடியார்கள் குடத்தைச் சுமந்து நீரையும் பூவையும் ஈட்டிக் கொண்டு வந்து உமக்குப் பணிசெய்ய, நீர், உம்மை என்றும் பிரியாது உடனிருத்தற் பொருட்டு, மணிவடம் அணிந்த தனங்களையுடைய மங்கை ஒரு பாகத்தில் இருக்க நடனத்தை மேற்கொண்டு, ஆடலும் பாடலும் நன்கு இயைய ஆடியும் பாடியும் அவர்கட்கு இன்பந் தருவீர்; அவ்வாறிருந்தும், நீண்ட கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் வைத்தது என்? கு-ரை : 'அது, வேண்டுங்காலத்து உமிழப்படுங்கொல்லோ என்னும் அச்சத்தை விளைவிப்பது' என்னும் குறிப்பொடு இவ்வாறு அருளிச்செய்யப்பட்டது. 'ஒன்ற' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
|