பக்கம் எண் :

502
 
82.தஞ்சொலார் அருள்ப யக்குந்

தமியனேன் தடமு லைக்கண்

அஞ்சொலார் பயிலும் ஆரூர்

அப்பனை ஊரன் அஞ்சிச்

செஞ்சொலால் நயந்த பாடல்

சிந்தியா ஏத்த வல்லார்

நஞ்சுலாங் கண்டத் தெங்கள்

நாதனை நணுகு வாரே. 

10

திருச்சிற்றம்பலம்


மெய்யென் றெண்ணும் வித்தகத்தாய வாழ்க்கை" என்று அருளினார். சதுரப்பாடில்லாத வாழ்க்கையை சதுரப்பாடுடையதாக அருளியது இகழ்ச்சிக் குறிப்பு; "நெருநலுள னொருவன் இன்றில்லை என்னும் - பெருமை யுடைத்திவ் வுலகு (குறள்-336,) என்றதுபோல. ‘வித்தகத்தது’ என்பது, குறைந்து நின்றது. வேண்டுதல், இன்றியமையாததாக அவாவுதல், விரும்புதல் - பற்றுச் செய்தல்.

10. பொ-ரை: பற்றுக் கோடாதற்குப் பொருந்தாத மகளிர் பொருட்டு மனம் உடைகின்ற தமியேனாகிய நம்பியாரூரன், அவரது பெருத்த தனங்களின் இன்பத்திலே அச்சந்தோன்றப் பெற்றவனாய், அழகிய சொற்களையுடைய மகளிர் ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருவாரூரிலுள்ள தந்தையைச் செவ்விய சொற்களால் வேண்டிப் பாடிய இப் பாடல்களை எண்ணிப் பாடவல்லவர், நஞ்சை அணி கலமாகத் தாங்கிய கண்டத்தையுடைய எங்கள் பெருமானை அடைவார்கள்.

கு-ரை: தஞ்சு - ஒல்லார் எனப் பிரிக்க. தஞ்சம் ‘தஞ்சு‘ எனக்கடை குறைந்தது. ஒல்லாமை பொருந்தாமை. ‘தடமுலை‘ அடையடுத்த ஆகுபெயராய் நின்று அதன் இன்பத்தைக் குறித்தது. நயத்தல் - விரும்புதல். அது, தன் காரியந் தோன்ற நின்றது. சிந்தித்தல் - அவற்றின் பொருளை என்க. ‘சிந்தையா லேத்தவல்லார்‘ என்பதும் பாடம்.