பக்கம் எண் :

512
 

10. திருக்கச்சியனேகதங்காவதம்

பதிக வரலாறு:

சுவாமிகள், காஞ்சியில் தங்கியிருந்த நாள்களில் திருஒணகாந்தன் தளியை வணங்கிக் கச்சி அனேகதங்காவதம் சென்று தரிசித்துப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 ஏயர் கோன். புரா. 192)

குறிப்பு: இது ‘சிவபிரானுக்கு மிக்க உவகையைத்தரும் இடம் கச்சி அனேகதங்காவதம் ஒன்றே’ என, அத்தலத்தினைப் புகழுமுகத்தால் அப்பெருமானது பெருமைகள் பலவற்றையும், தோன்ற அருளிச் செய்தது. இதனுள், ‘இடம்’ என்பன பலவும், ஒரு பெயர் குறித்த வேறு பெயர்க்கிளவிக்குப் (தொல். சொல். 42.) பெயர்தொறும் வந்த ஒரு முடிபாதல் அறிக

பண்: இந்தளம்

பதிக எண்: 10

திருச்சிற்றம்பலம்

94. தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு

மானதி டந்திகழ் ஐங்கணையக்

கோனை எரித்தெரி யாடி இடம்குல

வான திடங்குறை யாமறையா

மானை இடத்ததொர் கையன் இடம்மத

மாறு படப்பொழி யும்மலைபோல்

ஆனை யுரித்த பிரான திடங்கலிக்

கச்சி அனேகதங் காவதமே. 1



1. பொ-ரை: தேனாகிய நெய்யை விரும்பி உழல்கின்ற சிவந்த சடையை யுடைய எம்பெருமானும், அழகு விளங்கும், ஐங்கணையை உடைய அத்தலைவனாகிய மன்மதனை எரித்தவனும், தீயில் நின்று ஆடுபவனும், மேலானவனும், மிக்க புள்ளிகள் பொருந்திய மானை இடப்பக்கத்திலுள்ள ஒரு கையில் தாங்கினவனும், மும்மதங்களும் ஒன்றினொன்று முற்பட்டுப் பாய்கின்ற மலைபோலும் யானையை உரித்த பெரியோனும் ஆகிய இறைவன் விரும்பி உறையும் இடம், ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள, ‘திருவனேகதங்காவதம்’ என்னும் திருக்கோயிலே.