பக்கம் எண் :

529
 
118.ஈழ நாட்டுமா தோட்டந்தென்

னாட்டிரா மேச்சுரம்

சோழ நாட்டுத் துருத்திநெய்த்

தானந் திருமலை

ஆழி யூரன நாட்டுக்கெல்

லாம்அணி யாகிய

கீழை யில்லர னார்க்கிடங்

கிள்ளி குடியதே. 

7


119.நாளும் நன்னிலந் தென்பனை

யூர்வட கஞ்சனூர்

நீள நீள்சடை யான்நல்லிக்

காவு நெடுங்களம்

காள கண்டன் உறையுங்

கடைமுடி கண்டியூர்

வேளா நாட்டுவே ளூர்விளத்

தூர்நாட்டு விளத்தூரே. 

8



7. பொ-ரை: சிவபெருமானாருக்கு உரிய தலங்கள், ஈழநாட்டில் உள்ள மாதோட்டம், தென்னாட்டில் உள்ள இராமேச்சுரம், சோழநாட்டிலுள்ள துருத்தி, நெய்த்தானம், திருமலை, கடல் சூழ்ந்த நிலவுலகிற் கெல்லாம் அணியாய் விளங்கும் கீழையில், கிள்ளிகுடி என்பவை.

கு-ரை: மாதோட்டமாவது, அந்நகரின்கண்ணுள்ள, கேதீச்சரம். திருமலை, கீழையில், கிள்ளிகுடி இவை வைப்புத்தலங்கள்.

8. பொ-ரை: ‘நன்னிலம், பனையூர், கஞ்சனூர், நெல்லிக்கா, நெடுங்களம், கடைமுடி, கண்டியூர், வேளா நாட்டில் உள்ள வேளூர், விளத்தூர் நாட்டிலுள்ள விளத்தூர்’ என்பவைகளில், மிக நீண்ட சடையையுடையவனும், நஞ்சணிந்த கண்டத்தை யுடையவனுமாகிய இறைவன் எந்நாளும் எழுந்தருளியிருப்பன்.

கு-ரை: ‘நெல்லிக்கா’ என்பது, ஈற்றில் உகரம் பெற்றது. வேளூரும், விளத்தூரும் வைப்புத் தலங்கள். ‘வேளார் நாட்டு’ எனவும் பாடம் ஓதுவர். ‘தென்பனையூர், வடகஞ்சனூர்’ என்றது, அவை தம்முள் நோக்கி.