பக்கம் எண் :

547
 
145ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல

எம்பெரு மான்என்றெப் போதும்

பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்

தடிகளை அடிதொழப் பன்னாள்

வாயினாற் கூறி மனத்தினால் நினைவான்

வளவயல் நாவல்ஆ ரூரன்

பேசின பேச்சைப் பொறுத்தில ராகில

இவரலாதில்லையோ பிரானார். 

12

திருச்சிற்றம்பலம்


அருள் செய்பவராகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம் கடவுளாராகிய இவர்க்கு யான் ஒரு பிறப்பில் அடியேன் அல்லேன்; ஏழ் பிறப்பிலும் அடியேன்; அதுவேயுமன்றி, இவர் தம் அடியார்க்கும் அடியனாயினேன்; என்னை விற்கவும், ஒற்றி வைக்கவுமான எல்லா உரிமைகளுமாக இவர்க்கு நான் உரியவனாயினேன்; இவர்தம் ஒளி பொருந்திய மலர் போலும் செம்மையான திருவடிகளே எனக்கு உறுதுணையாக, என் உள்ளம் அவற்றிடத்து உருகா நிற்கும்; இவ்வாறாக, இவர், முன்பு பெருமைகள் பேசி, பின்பு சிறுமைகள் செய்வாராயினும், அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!

கு-ரை: ‘காட்டாய்’ என்பதனை, ‘காட்டாக’ எனத்திரித்து, முன்னே கூட்டுக. "உள்ளமும்" என்னும் உம்மை, 'உடலும்’ என எதிரது தழுவிற்று. ‘எம்மடிகள்’ என்பது பாடமாகாமை அறிக. ‘எம்மடிகள்’ என அளபெடுத்து ஓதுதலும் ஆம்.

12. பொ-ரை: ‘எம்பெருமான்’ என்று, எப்போதும் உரிமையோடு பரவிய புகழை யுடையவனும், திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவரை யடைந்து அவரது திருவடிகளைத் தொழவேண்டுமென்று பல நாட்கள் வாயினாற் சொல்லி, மனத்தினால் நினைந்தவனும் ஆகிய, வளப்பமான வயல்கள் சூழ்ந்த, திரு நாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள், உண்மையில் ஏசினவும் அல்ல; இகழ்ந்தனவும் அல்ல; ஆதலின், அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும்; அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!