கற்றுக் கொள்வன வாயுள நாவுள இட்டுக் கொள்வன பூவுள நீருள கற்றைச் செஞ்சடை யான்உளன் நாமுளோம் எற்றுக் கோநம னால்முனி வுண்பதே. -தி. 5 ப. 91 பா. 6 என்பனபோல இறைவனை அகத்திலும், புறத்திலும் பூசிக்கும் பூசனையை வலியுறுத்தும் பாடல்களும், அப்பர் திருமுறையிலே சிறந்து விளங்கும். இனி, இறைவனைத் தோழமையால் பெரிதும் உரிமையோடு நெருங்கிக் கூறும் பாடல்களைச் சுந்தரமூர்த்திகளது திருப் பதிகங்களிலேதான் காண இயலும். முதலையுண்ட பாலனை அழைக்கப் பாடுமிடத்தில், "புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே - கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே" (தி. 7 ப. 92 பா. 4) என்று வேண்டும் திருமொழியில், நாயனாருக்கு இறைவன்பால் உள்ள உரிமை எத்துணை வெளிப்படையாக விளங்குகின்றது! "பாம்பினொடு படர்சடைகளவை காட்டி வெருட்டிப் - பகட்ட நான் ஒட்டுவனோ, மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர் - வாழ்விப்பன் என ஆண்டீர் - ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீரல்லீர் அணி ஆரூர் புகப்பெய்த அருநிதியமதனில் தோற்ற மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒரு பொழுதும் அடியெடுக்கலொட்டேன், மிகுதிண்ணென என் உடல்விருத்தி தாரீரேயாகில் திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக் கண்ணறையன் கொடும் பாடன் என்றுரைக்க வேண்டா" (தி. 7 ப. 46) என்பன போன்ற பகுதிகளை விட உரிமை மிகுதியைக் காட்டும் பகுதிகள் வேறு எவை வேண்டும்! ஆளுடைய நம்பிகள் திருஓணகாந்தன் தளியில் சென்று பொன் வேண்டும்பொழுது, இறைவரைப் பார்த்து, 'நீர் மதியுடையவர் செய்கை செய்யீர்' (தி. 7 ப. 5 பா. 3) என்று கழறுகின்றார். இத் தொடரை இறைவர்முன் நின்று மீளச் சொல்லவும் நம்போலியர்க்கு நாவும், நெஞ்சும் நனிமிக அஞ்சும்; ஆயினும், அஃது இறைவர்க்கு நன்றாய தோத்திரமாயிற்று. என்னே வன்றொண்டரது வன்றொண்டு! ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அரசுகள் ஆகிய அவர்களும், இறைவனை நேரேகண்டு, தம் அநுபவப் பொருளாகப்
|