பெற்றவர்கள்தாம். என்றாலும், அவனை, அன்றாட வாழ்க்கையில் உடன் உறைவோனாகப் பெரிதும் புலப்படக் கண்டு அளவளாவி, ஊடியும் உகந்தும் உரையாடி, இருமைப் பயனும் இனிது பெற்று நுகர்ந்தவர் ஆளுடைய நம்பிகளே என்றல், சிறிதும் மிகையாகாது. சங்கிலியாரது திருமணத்தில் இறைவனை, நாயனார், கோயிலை விட்டு மகிழமரத்தடியில் போய் இருக்கச் சொல்லியதும், இறைவனும் அதற்கு இசைந்து, அதனை அவர் அறியாமல் சங்கிலியாரிடம் தெரிவித்து, நாயனாரை மகிழடியில் வந்து சூளுரைக்கச் செய்யுமாறு கேட்கச் செய்ததும், நாயனார் பின்பு அச் சூளுரையைக் கடந்தபோது அவரைக் கண் இழப்பித்து, அடிக்கடி எளிமையில் எதிர்ப்படுகின்ற அவன், அவர் பன்முறை வேண்டியும் பலநாள் எதிர்ப்படாதொழிய, நாயனார், திருவெண்பாக்கம் கோயிலிற் சென்று, 'பெருமானே, நீ கோயிலில் இருக்கின்றாயோ' (தி. 7 ப. 89 பா. 1) என்று கேட்டதும், அதற்கு இறைவன், ஓர் ஊன்றுகோலை அவர் முன்னே வீசி, 'உளோம்; போகீர்' என்றதும், பின்னர்க் காஞ்சிபுரத்திலும், திருவாரூரிலும் நாயனார் எத்துணையோ வகையாகக் குறையிரந்து நிற்க, இறைவன் திருவுளம் இரங்கி முறையே இடக்கண்ணையும் வலக் கண்ணையும் கொடுத்தருளி, முன்போலவே தோழமை உரிமை தந்து நின்று, பரவையாரிடம் ஒரு முறையன்றி இருமுறை நாயனாருக்காகத் திருவாரூர்த் தெருவில் தூது நடந்ததும் போல அணுக்கமாகிய உரிமைப் பேறுகளைச் சுந்தரர் தவிர வேறு யாவர்தாம் பெற்றார்! இது பற்றித்தான்போலும். 'திருக்களிற்றுப்படியார்' என்னும் சாத்திரத்தின் ஆசிரியர், சம்பந்தரது பெருமையையும், அப்பரது பெருமையையும், "தென்புகலி வேந்தன் செயல், திருவாமூராளி செயல்" (திருக்களி. 70, 71) என்று சிலவற்றை எடுத்துச் சொல்லி, சுந்தரரது பெருமையைச் சொல்லுங்கால், "வன்றொண்டன் தொண்டதனை ஏதாகச் சொல்வேனியான்" (திருக்களி. 72) என்று சொல்லிப் போந்தார். சங்கிலியாரது திருமணம் பற்றி இறைவன் செய்த செயலை, "சொன்ன எனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே - என்னவல்ல பெருமானே இங்கிருந்தாயோ" (தி. 7 ப. 89 பா. 9) என்று நாயனார் இறைவனை நகை யுண்டாக வினாவுகின்றார். இன்னும், "கண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்தாயோ" (தி. 7 ப. 89 பா. 6) என்று கேட்கின்றார். பல இடங்களில் நகை யுண்டாகப் பாடியது
|