169. | வேகங்கொண் டோடிய வெள்விடை | | ஏறியோர் மெல்லியலை | | ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் | | வைத்தெனை ஆளுங்கொண்டார் | | போகங்கொண் டார்கடற் கோடியின் | | மோடியைப் பூண்பதாக | | நாகங்கொண் டார்க்கிடம் ஆவது | | நந்திரு நாவலூரே. | | 3 |
3. பொ-ரை: விரைவைக் கொண்டு ஓடுகின்ற வெள்ளிய விடையை ஊர்பவரும், மெல்லிய இயல்பினை உடையாளாகிய மங்கை ஒருத்தியைத் திருமேனியிற் கொண்டவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையுங் கொண்டவரும், தென்கடல் முனையில் உள்ள கொற்றவையைக் கூடி இன்பங் கொண்டவரும், பாம்பை அணியும் பொருளாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரேயாகும். கு-ரை: உமையம்மை இறைவரது சத்தியேயாதலை, "ஆகங் கொண்டார்" என்பதனாலும், பிற தெய்வங்கள் அச்சத்தி பதியப் பெற்றனவாதலை, "போகங்கொண்டார்" என்பதனாலும் அருளிச் செய்தார். காளியைக் குறிக்கும் ‘மோடி’ என்னும் சொல், வேற்றுமை சிறிதாதல் பற்றி இங்குக் கொற்றவை (துர்க்கை) யைக் குறித்தது. "கடற் கோடி" என்றது குமரிமுனையை. அங்கு நின்று அருள் செய்யும் தெய்வமும், சிவபெருமானது சத்தியினாலே ஆயது என்பதனைத் தெளிவித்தவாறு. சிவபெருமானது சத்தி பதிந்து நடாத்துதல் பற்றி, கொற்றவையும் அச் சத்தியாகவே முகமன் கூறப்படுவள் அங்ஙனம் கூறப்படுதலைச் சிலப்பதிகாரத்துள் வேட்டுவ வரியுள் கொற்றவையைப் பல படப் புகழந்து நிற்கும் பாட்டாலும் அறிக. எனவே, இமயம் முதற் குமரி காறும் உள்ள நல்வரைப்பு முழுதும், சிவபெருமானது திருவருள் விளங்கும் திருநிலமாதல் பெறப்பட்டது. "கடற் கோடி" என்றதனை, ‘கோடிக்குழகர்’ என்னும் தலமாக உரைப்பாரும் உளர்; அது சிறவாமை அறிக.
|