நினைத்தலும் குற்றமாம் என்க. இறைவன் எவ்வளவுக்கெவ்வளவு அடியவர்க்கு எளியனாய் வருகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு அவ்வடியவர் முனைப்பு அற்ற நிலையில் உள்ளார் என்பதே உண்மை. அதனால், சுந்தரருக்கு எளிவந்ததுபோல, இறைவன் பிறருக்கு எளிவந்ததில்லை என்றால், சுந்தரரைப்போலத் தன் முனைப்பு நீங்கினவர் இல்லை என்பதுதான் பொருள். பொன்வேண்டிப் பாடியவை, பழிப்பது போலப் புகழ்ந்து நகைச் சுவையாகப் பாடியவை, இவைகள் சுந்தரரது தேவாரத்திற்கு உள்ள சிறப்பியல்பாதல் பற்றி, அவையே அவரது திருப்பதிகங்களில் உள்ளன போலத் தோன்றினும், அவரது உண்மைநிலையைத் தெளிவாகப் புலப்படுத்தும் பகுதிகளும் பல காணப்படுதலைக் குறிக்கொளல் வேண்டும். "மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்" (தி. 7 ப. 48 பா. 1) "நான் மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே"(-) "வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால் மற்று நான்அறி யேன்மறு மாற்றம்" (தி. 7 ப. 54 பா. 1) "பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன்"(-)
"திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்கள்" (தி. 7 ப. 69 பா. 1) என்றாற்போலும் பகுதிகள், நாயனாரது சிவபத்தியின் உறைப்பினைத் தெற்றென விளக்கும். "ஓவும்நாள் உணர்வழியும் நாள் உயிர் | போகும்நாள் உயர்பாடைமேற் | காவும்நாள் இவை என்றலாற் கருதேன்" | (தி. 7 ப. 48 பா. 3) |
|