பக்கம் எண் :

61
 

என்பது, "பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே" (தி. 6 ப. 1) என்றதினும் எத்துணை வன்மையாய்க் காணப்படுகின்றது!

"பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்

பாவியேன் ...............

எத்தனைநாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர்

இறைவனையே"

(தி. 7 ப. 51 பா. 1)

என்றதினும், நாயனாருக்கு இறைவரது பிரிவால் உளதாகும். துன்பத்தை விளக்க வேறு சான்று வேண்டுமோ!

தாம் செய்வது பெரியதொரு குற்றம் அன்று எனச் சூள்கடக்கும் குற்றத்தை நாயனார் செய்தாராயினும், அஃது இறைவரது திருவுள்ளத்திற்கு ஒவ்வாமை அறிந்தபின்னர்.

"குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையான் மிகைபல செய்தேன்"

(தி. 7 ப. 69 பா. 6)

என்று, அதனை வெளிப்படையாகச் சொல்லிப் பொறுத்தருள வேண்டுகின்றார்.

அப்பிழை காரணமாக இறைவர் கண்ணை மறைத்து, உடம்பிற் பிணியை உண்டாக்கினமைக்கு இறைவரைவெறாது, அழுது வேண்டும் பகுதிகள், கருங்கல் மனத்தையும் கரைந்துருகச் செய்யும்.


"அத்தா என்இடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்"

(தி. 7 ப. 54 பா. 3)

"கழித்தலைப்பட்ட நாயதுபோல

ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை

ஒழித்து நீ அருளாயின செய்யாய்"

(தி. 7 ப. 54 பா. 5)

"அகத்திற் பெண்டுகள் நான்ஒன்று சொன்னால்

அழையேற் போகுரு டாஎனத்தரியேன்

முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்"

(தி. 7 ப. 54 பா. 9)