பக்கம் எண் :

601
 

21. திருக்கச்சிமேற்றளி

பதிக வரலாறு:

வன்றொண்டர் காஞ்சிபுரத்தில் தங்கியிருக்கும் நாள்களில் திருக்காமக்கோட்டம் சென்றிறைஞ்சி, திருக்கச்சி மேற்றளி தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 190.)

குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரைத், திருக்கச்சி மேற்றளியில் தரிசித்த ஞான்று மீதூர்ந்த அன்பின் பெருக்கால், 'அடியேன் உம்மை யன்றிப் பிறரைப் புகழகில்லேன்' என அருளிச்செய்தது.

பண்: நட்டராகம்

பதிக எண்: 21

திருச்சிற்றம்பலம்

209.நொந்தா வொண்சுடரே நுனை

யேநி னைந்திருந்தேன்

வந்தாய் போயறியாய்

மனமேபு குந்துநின்ற

சிந்தாய் எந்தைபிரான் திரு

மேற்ற ளிஉறையும்

எந்தாய் உன்னையல்லால் இனி

ஏத்த மாட்டேனே.

1

 


1. பொ-ரை: அவியாத ஒளிபொருந்திய விளக்குப் போல்பவனே, என் தந்தைக்கும் பெருமானே, கச்சித்திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே, உன்னையே நினைந்திருந்த என் உள்ளத்திலே புகுந்துநின்ற சிந்தனைப் பொருளே, என் உள்ளத்தில் புகுந்த நீ பின் நீங்கியறியாய்; ஆதலின், இனி அடியேன் உன்னையன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன்.

கு-ரை: 'நுந்துதல் - தூண்டுதல். அதுவே, நொந்துதல் என மருவிற்று' என்றலும் ஆம். சுடர், உவமையாகுபெயர். பின் இவ்வாறு வருவனவும் அவை. 'நின், உன்' என்பனவேயன்றி, 'நுன்' என்பதும் திருமுறைகளில் உள்ளது என்பதை, ஆறாந்திருமுறைக் குறிப்பிற் காண்க. "சிந்தை" என்பது, சிந்தையுள் நிற்கும் பொருளைக் குறித்தது.