பக்கம் எண் :

606
 
215.கையார் வெஞ்சிலைநா ணதன்

மேற்ச ரங்கோத்தே

எய்தாய் மும்மதிலும் மெரி

யுண்ண எம்பெருமான்

செய்யார் பைங்கமலத் திரு

மேற்ற ளிஉறையும்

ஐயா உன்னையல்லால் அறிந்

தேத்த மாட்டேனே.

7


7. பொ-ரை: எம் பெருமானே, வயலின்கண் பரவியுள்ள பசிய தாமரைகளையுடைய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, நீ உன் கையின்கண் பொருந்திய கொடிய வில்லினது நாணின்மேல் அம்பைத் தொடுத்து, மூன்று மதில்களையும் தீ உண்ணும் படி எரித்தாய்; ஆதலின், உன்னையன்றிப் பிறரைத் தேவராக எண்ணிப் புகழவேமாட்டேன்.

கு-ரை: 'திரிபுரம் எரித்த வரலாற்றினால் ஏனைய எல்லாத் தேவரும் உனக்கு ஏவலராய் நின்று தாங்கள் நன்மை எய்தினமையை அறிந்தேனாகலின், யான் உன்னையே தொழுவேன்' என்றபடி. "கையார் வெஞ்சிலைநாண் மேல்சரங் கோத்து" என்ற விருப்பு, 'பிறரால் வளைத்துக் கொள்ளப்படாத வில்லில், பிறரால் பூட்டப் படாத நாணில், பிறரால் தொடுக்கப்படாத அம்பினைத் தொடுத்து' என்பதனை விளக்கிநின்றது. 'ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ - ஒருகணை கொண்டு மூவெயிலுடற்றிப் - பெருவிறல் அமரர்க்கு வென்றிதந்த - கறைமிடற் றண்ணல்" (புறம் - 55.) எனச் சான்றோருங் கூறினார். அது, பகுதிப் பொருள் விகுதி; ஏகாரம்; அசைநிலை. இனி ஏகாரத்தை வினாப்பொருளதாக்கி, 'சிலைநாணில் சரம் கோத்தோ எரியுண்ண எய்தாய்? இல்லை; சிரித்து எரியுண்ணச் செய்தாய்' என உரைத்து, 'அதனால், கரணத்தானன்றிச் சங்கற் பத்தாற் செய்பவன் நீ என அறிந்தேன்' என்பது போந்த பொருளாக உரைப்பினும் ஆம்.


"ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற"

என்னும் திருவாசகமும் (தி. 8 திருவுந்தி - 2.) இக் கருத்தே பற்றி எழுந்தது.