சருக்கத்தின் முடிவுதோறும் சுந்தரரை வணங்கிக் கூறும் வணக்கச் செய்யுட்கள், உன்னி உன்னி உணர்தற்குரியனவாம். ஆகவே, நம்பியாரூரரது சிவபத்திச் சிறப்பும், சிவானுபவ உண்மையும் அவர் அறிதல். அவரை ஆண்டபெருமான். அறிதல் அன்றி மற்று யாவரே அறியவல்லார்! இத்தகைய அளப்பரும் பெருமையும், அருட்டன்மையும் பொதிந்தவை நமபியாரூரரது திருப்பதிகங்கள். பன்னிரு திருமுறைகளையும் மக்கள் ஒருவாறேனும் பொருளுணர்ந்து ஓதி உய்தல் வேண்டும் என்னும் பெருங் கருணையால், அவைகட்குத் தக்க அறிஞர்களைக் கொண்டு குறிப்பெழுதத் திருவுளம் பற்றிய, திருத்தருமை ஆதீனம் 25 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் ஆறாந் திருமுறைக்கு அருள் பாலித்தது போலவே, ஏழாந் திருமுறைக்கும் குறிப்பெழுதும் வண்ணம் அடியேனுக்கு அருளாணை வழங்கினார்கள், மகாசந்நிதானத்தில் எழுந்த அருளாணையைச் சிரமேல் ஏற்கும் வகையில் அடியேன் அப்பணியை மேற்கொண்டதன்றி இவ்வரும் பெருந்திருமுறையின் பொருளைக் காண, யான் என்ன உரிமையுடையேன்! ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு செயலை ஒவ்வொருவர் வாயிலாகச் செய்து முடிக்கும் திருவருள், என்னை இப்பணியிற் செலுத்துமாயின், என்னால் இயல்வது இயல்க என்னும் எண்ணத்தோடே இப்பணியில் இயன்ற அளவு முயன்றேன். ஆறாந்திருமுறையில் குறிப்புரை மட்டுமே எழுதப்பட்டது. அதற்கு முன்னுள்ள திருமுறைகளில் ஐந்தாந் திருமுறை தவிர, ஏனைய திருமுறைகட்கு அவ்வாறு குறிப்புரைகளே எழுதப்பட்டன. ஆயினும் ஏழாந்திருமுறையை நோக்குமிடத்து, பொழிப்புரையும் இன்றியமையாததெனத் தோன்றிற்று. ஆறாந்திருமுறைப் பாடல்கள் பெரும்பாலும், தனித்தனிச் சிறு தொடர்களால் ஆனவை. இவ்வேழாந் திருமுறைப் பாடல்கள் அவ்வாறின்றிப் பெரும்பாலும், பாடல் முழுதும் ஒருதொடராய் அமைந்து, பலவகையில் கொண்டு கூட்டிப் பொருளுரைக்கத் தக்கனவாய் இருத்தலே, அவ்வாறு தோன்றினமைக்குக் காரணம். ஆகவே இத்திருமுறைக்குப் பொழிப்புரையோடு கூடிய குறிப்புரையே எழுதப்பட்டது. இத்திருமுறையின் பதிப்புக்களில், திருப்பனந்தாள் காசி
|