பக்கம் எண் :

64
 

மடத்துப் பதிப்பு, சென்னைச் சைவசித்தாந்த மகா சமாஜத்து வரலாற்று முறைப் பதிப்பு, ஆகிய இவ்விரு பதிப்புக்களில் மட்டுமே மிகச் சுருங்கிய அளவில் சிற்சில உரைக் குறிப்புக்கள் தரப்பட்டன. ஆயினும், மற்றும் பெரும்பகுதிகள் பெரிதும் முயன்று பொருள் காண வேண்டியிருந்தன. அவற்றிற்கெல்லாம், எனது சிந்தனை சென்ற அளவில் ஒருவாறு புலனாய பொருள்களைக் குறித்துள்ளேன்; அறிஞர் உலகம் அவற்றை ஆய்ந்து, ஆவன செய்வதாக.

இவ்வேழாந் திருமுறை ஈடுபாட்டில் முதன்மையாகத் தோன்றியது, தேவாரத் திருப்பாடல்களில் பல இடங்களில் மூலபாடம் தக்க வகையில் நன்கு போற்றப்படவில்லை என்பதே. ஆறாந் திருமுறையில் ஈடுபட்ட பொழுதே இஃது ஒருவாறு தோன்றியது. எனினும் இத் திருமுறையில் அவ்வெண்ணம் பெரிதும் உறுதிப்பட்டது.

பல இடங்களில் பதிப்புத்தோறும் பாடங்கள் வேறு வேறாகவே காணப்படுகின்றன. அவைகளில் யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதரவர்கள் தமது தலமுறைப் பதிப்பில், பல இடங்களில் பொருத்தமான பாடத்தை ஏற்று, மற்றவைகளைப் பாடபேதமாகக் காட்டியுள்ளார்கள். அவைகளே, பின்வந்த பதிப்புக்களுக்கெல்லாம் முதலாய் அமைந்துள்ளன.

மற்றும் பல இடங்களில் உண்மைப்பாடம் வேறொரு வகையாதல் தோன்றிய போதிலும், அவற்றைத் திருத்துதற்கு அஞ்சித் திருத்தவில்லை. ஆயினும், அவற்றை அவ்வாறு திருத்துதல் ஆசிரியர்களது அருள் மொழிகளைத் திருத்துதல் ஆகாது என்பதும், அவர்களது அருள் மொழிகளை உண்மையாகப் பெற்று ஓதுவதாம் என்பதுமே நினைவிற் கொள்ளத்தக்கன.

வாய்ப்பு உளதாயின், அவைபற்றி விளக்கும் விருப்பம் உடையேன். இவ்வகையில், ஏழாந் திருமுறை உரைப் பதிப்பு, திருவருளாலும், குருவருளாலும் ஒருவாறு முற்றுப்பெற்றது.

திருத்தருமை ஆதீனம் 25 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணியவர்களது திருவுளப்பாங்கினால், இவ்வாதீனத்தின் சார்பில் ஆறு திருமுறைகள் முன்பே உரைக்குறிப்பு, ஆராய்ச்சிக் கட்டுரைகள், பாட்டு முதற் குறிப்பகராதி, சொல்லகராதி முதலியவைகளுடன் நன்கு வெளிவந்துள்ளன.

இதுபோழ்து ஏழாந் திருமுறை, அவ்வாறு பொழிப்புரை,