பக்கம் எண் :

65
 

குறிப்புரை முதலியவைகளுடன் வெளி வருகின்றது. குருமகாசந்நிதானத்தின் இப்பெருங்கருணைத் திறத்திற்கு, தமிழுலகம் - சிறப்பாகச் சைவ உலகம் பெரிதும் நன்றி யறியுங் கடப்பாடுடையது. உயிர்க்கு உறுதி பயக்கும் ஒப்பற்ற இப் பேரருட் பெரும்பணியை அடியேனுக்குக் கிடைக்கத் திருவருள் பாலித்த ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் திருவடிகட்கு எனது மன மொழி மெய்களாலாய பெருவணக்கத்தைச் செலுத்திக் கொள்கின்றேன்.

இவ் ஏழாந் திருமுறைப் பதிப்பு, திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்களது திருக்கண் பார்வையுடன், அவர்களது நன்மதிப்பைப் பெற்று மிளிரும் சிறப்புடையதாய்த் திகழ்கின்றது.

ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சுவாமிகளவர்கள், திருமுறையில் தோய்ந்து திளைத்த தங்களது திருவுள்ளம் காரணமாக, திருமுறைத் திருப்பணியையே தங்கள் முதல் திருப்பணியாகச் செய்து வருபவர்கள். அவர்களது திருவருட் பார்வையில் பன்னிரு திருமுறைகளும் செவ்விய முறையில் வெளிவந்து, அன்பர் பலர்க்கும் பயன்பட்டு வருதல் கண்கூடு.

பாடல் பெற்ற தலங்கள் பலவற்றில் ஓதுவார்களை நியமித்துத் திருமுறைகளை ஓதிவரவும், மாணவர்களுக்குத் தேவாரப் பரிசுகள் வழங்கவும், சிறந்த விழா நாட்களில், தேவாரப் பண்ணிசைவாணர்கள் திருமுறைப் பாராயணம் நிகழ்த்தவும், ஆங்காங்கு அறக் கட்டளைகள் பலவற்றை அமைத்தும், திருக்கோயில்கள் பலவற்றில், அவற்றிற்குரிய திரு முறைப் பகுதிகளைச் சலவைக் கல்லில் பொறித்துப் பதிப்பித்தும் தேசமெங்கும் திருமுறைகள் பரவச் செய்து வருகின்ற அவர்கள் இத்திருமுறைப் பதிப்பிற்கு அருள்கூர்ந்து மதிப்புரை வழங்கியருளிய கருணைப் பெருக்கிற்கு, எனது மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆளுடைய நம்பிகளது அருட்டிருப் பதிகங்கள் அனைத்தும் அடங்கியுள்ள இவ்வேழாந் திருமுறைக்கு முதற்கண் இன்றியமையாது வேண்டப்படுவது அந்நாயனாரது அருள்வரலாறாகும். அதனை, தக்க அகச்சான்று புறச்சான்றுகளுடன் நன்கு எழுதி உதவியவர்கள். தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரிப் பொறுப்பு முதல்வர் திருநெறிச் செம்மல், வித்துவான், திரு வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்.