பக்கம் எண் :

668
 
293.

வரும்பழி வாராமே

தவிர்த்தென்னை யாட்கொண்டாய்

சுரும்புடை மர்க்கொன்றைச்

சுண்ணவெண் ணீற்றானே

அரும்புடை மலர்ப்பொய்கை

அல்லியும் மல்லிகையும்

விரும்பிய குருகாவூர்

வெள்ளடை நீயன்றே.

5



இளமையான அன்னங்கள் நிலைபெற்று வளர்கின்ற திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே. நீயன்றோ, என்னை வெப்புநோயோடு பிற நோய்கள் எல்லாவற்றையும் நீக்கி உய்யக்கொண்டாய்!

கு-ரை: எல்லாப் பிணிகட்கும் முதலாய்த் தோன்றுவது வெப்பு நோயாகலின், அதனைத் தலையாயதாக ஓதினார். சுவாமிகளுக்குப் பிணி தீர்த்தமையாவது, வலிந்து ஆட் கொண்டமையால் நோய் அணுகாத திருமேனியராயினமையேயாம். "அப்படி" என்பது, மிகுதி யுணர்த்துவதோர் வழக்குச் சொல்.

5. பொ-ரை: வண்டுகளை உடைய கொன்றை மலர் மாலையையும், பொடியாகிய வெள்ளிய திருநீற்றையும் உடையவனே, அரும்புகளையுடைய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகளில் உள்ள ஆம்பல் மலர்களையும், பூங்காவில் உள்ள மல்லிகை மலர்களையும் மிகுதியாக உடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நீயன்றோ, எனக்கு வருதற்பாலதாய பழிவாராமல் தடுத்து, என்னை ஆட்கொண்டாய்!

கு-ரை: 'வருதற்பாலதாய பழி' என்றது, 'திருக்கயிலையில் இருந்தும் இறைவனை யடையாது பிறப்பில் அகப்பட்டார்' எனச் சொல்லப்படுதல். இறைவன் தடுத்தாட் கொண்டமையின், அப்பழி வாராதொழிந்தமை யறிக.

அல்லியை, "பொய்கை அல்லி" என்றதனால், மல்லிகை வேறிடத்துள்ளமை கூறுதல் கருத்தாயிற்று. உடைமையை, விரும்பியதாக அருளியது இலக்கணை.