30. திருக்கருப்பறியலூர் பதிக வரலாறு: சுந்தரர் தில்லையில் கூத்தப்பெருமானைக் கும்பிட்டுத் திருக்கருப்பறியலூர் என்னும் திருக்கொகுடிக் கோயிலினை அடைந்து பணிந்து தங்கியிருக்கும் நாள்களில், இறைவர்தமை நினைவதனால் பெறும் இன்பத்தை எடுத்துச் சொல்லிப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன் புரா. 115-118) குறிப்பு: இத் திருப்பதிகம், திருக்கருப்பறியலூர்ப் பெருமானைக் கண்களாற் கண்ட இன்பம். பின்னரும் உள்ளத்தில் நின்று பெருகுமாற்றினை எடுத்தோதி அருளிச்செய்தது. பண்: நட்டராகம் பதிக எண்: 30 திருச்சிற்றம்பலம் 299. | சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து | | திறம்பா வண்ணம் | | கைம்மாவி னுரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக் | | கருப்ப றியலூர்க் | | கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங் | | கொகுடிக் கோயில் | | எம்மானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் | | கினிய வாறே. | | 1 |
1. பொ-ரை: யானைத் தோலைப் போர்த்துநின்ற காலத்தில் உமையவள் அஞ்ச, அதனைக் கண்டு நின்றவனும், திருக்கருப்பறியலூரில் உள்ள, தளிர் கிள்ளுதற்குரிய மாமரங்களில் இருந்து குயில்கள் பாட, கீழே மயில்கள் ஆடுகின்ற சோலைகளையுடைய கொகுடிக் கோயிலின்கண் எழுந்தருளியுள்ள எம்பெருமானும் ஆகிய இறைவனை, நாம் உடலை நேரே நிறுத்திக் கண்களைச் சிறிது மூடியிருந்து உள்ளத்தில் அன்போடு நிலை பெயராது இருத்தி, இவ்வாறு மனத்தினால் நினைந்தபோது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது. கு-ரை: 'செம்மாந்து' என்பது, "சிம்மாந்து" என மருவிற்று.
|