உ சிவமயம் திருச்சிற்றம்பலம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருமுறையில் சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 1 சுந்தரர் தேவாரத்தில் இலக்கிய இன்பம் வித்துவான் ப. நீலா எம். ஏ., தமிழ்ப்பேராசிரியை, தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி. பொங்குமா கடல் சூழ்ந்த பூவுலகத்தை வாழ்விக்க வந்த சைவ சமயாசாரியர் நால்வருள் 'ஏழாம் திருமுறை' ஆசிரியரான ஸ்ரீ சுந்தரமுர்த்தி சுவாமிகளும் ஒருவர். திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில் சடையனார் இசைஞானியார் நடத்திய இல்லறத்தின் எழில் விளக்காய் அவதாரம் செய்தார். மாதொரு பாகனார்க்கு வழிவழி யடிமை செய்யும் வேதியர் குலத்தில் தோன்றி மேம்படு சடையனார்க்கு ஏதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானியார்பால் தீதகன்று உலகமுய்யத் திருவவ தாரம் செய்தார். என்று (தி. 12 தடுத்தா. 3) சேக்கிழார் பெருமான் இவரது அவதாரத்தைப் பற்றிக் கூறுகிறார். குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் விளையாடும் பருவத்தில் நரசிங்க முனையரையரின் காதல் மகனாக மாறினார். உரிய பருவத்தில் மணமுடிக்க எண்ணினர் பெற்றோர். விதிப்படி நடந்தேறின திருமணக் காரியங்கள். புத்தூர் சடங்கவி சிவாசாரியாரின் அருமை மகளை மணம் முடிக்கும் நேரத்தில் முழுதுணர்ந்த பெருமான் வலிய வந்து சுந்தரரை ஆட்கொண்டார். இதனைப் பெருமானே தம்வாக்கால் கூறுவார், 'வித்தகம் பேச வேண்டா! பணிசெய்ய வேண்டும்' என்று.
|