பக்கம் எண் :

684
 
313.கச்சை யூர்கா வங்கழுக் குன்றங்கா ரோம்
பிச்சை யூர்திரி வான்கட வூர்வட பேறூர்
கச்சி யூர்கச்சி சிக்கல்நெய்த் தானம் மிழலை
இச்சை யூரெய்த மானிடை யாறிடைமருதே.

4

 

314.நிறைய னூர்நின்றி யூர்கொடுங் குன்ற மமர்ந்த
பிறைய னூர்பெரு மூர்பெரும் பற்றப் புலியூர்
மறைய னூர்மறைக் காடு வலஞ்சுழி வாய்த்த
இறைய னூரெய்த மானிடை யாறிடை மருதே.

5



4. பொ-ரை: பிச்சைக்கு ஊர்தோறும் திரிபவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும், ஆகிய இறைவன் விரும்புதல் செய்கின்ற ஊர்கள், 'கச்சையூர், பலகாக்கள், அழகிய கழுக்குன்றம், காரோணம், கடவூர், வடபேறூர், கச்சணிந்தவளாகிய காமக்கோட்டி யம்மையது ஊரெனப்படுகின்ற காஞ்சி, சிக்கல், நெய்த்தானம், வீழிமிழலை, இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே.

கு-ரை: பல காக்களாவன, 'கோலக்கா, ஆனைக்கா முதலியன. 'காரோணம்' என்னும் பெயருடைய கோயில்கள், குடந்தை, நாகை முதலிய சில இடங்களில் உள்ளன. கச்சையூர், வடபேறூர் இவை வைப்புத்தலம். சத்தி பீடங்களுள் முதலதாகலின், காஞ்சியை அம்மைக்கு உரியதாக அருளினார். 'கைச்சி ஊர்' எனப் பாடம் ஓதி, 'கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகரை வழிபடுவனவும், முப்பத்திரண்டு அறங்களையும் வளர்ப்பனவுமாகிய கையை உடையவளது ஊர்' என்று உரைத்தலும் ஆம்.

5. பொ-ரை: எங்கும் நிறைந்தவனும், விரும்பிச் சூடிய பிறையை உடையவனும், வேதத்தை ஓதுபவனும், வலஞ்சுழியில் பொருந்தியுள்ள கடவுளும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள், 'நின்றியூர், கொடுங்குன்றம், பெருமூர், பெரும்பற்றப்புலியூர், மறைக்காடு, இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே.

கு-ரை: 'நிறையனூர், பிறையனூர், மறையனூர்' என்பனவற்றையும், 'இறைவனூர்' என்று பாடம் ஓதி அதனையும் வைப்புத் தலங்களாகக் கூறுவாரும் உளர். பெருமூர், வைப்புத் தலம். பெரும்பற்றப்புலியூர், தில்லை.