315. | திங்க ளூர்திரு வாதிரை யான்பட் டினமூர் நங்க ளூர்நறை யூர்நனி நாலிசை நாலூர் தங்க ளூர்தமி ழானென்று பாவிக்க வல்ல எங்க ளூரெய்த மானிடை யாறிடை மருதே. | | 6 |
316. | கருக்க நஞ்சமு துண்டகல் லாலன்கொல் லேற்றன் தருக்க ருக்கனைச் செற்றுகந் தான்றன் முடிமேல் எருக்க நாண்மலர் இண்டையும் மத்தமுஞ் சூடி இருக்கு மூரெய்த மானிடை யாறிடை மருதே. | | 7 |
6. பொ-ரை: இறைவனை, 'தமிழில் விளங்குபவன்' என்று கருதவல்ல யாங்கள், எம்முள் அளவளாவுங்கால், எம்மை நீக்கி, 'எம்மினும் உயர்ந்த அடியவர்கட்கு உரிய ஊர்' என்றும், யாவரையும் உளப்படுத்து, 'நங்கள் ஊர்' என்றும், பிறரொடு சொல்லாடுங்கால், முன்னிலையாரை நீக்கி, 'எங்கள் ஊர்' என்றும் சொல்லுமாறு, யாவராலும் அடையப்படும் பெருமானாகிய இறைவனுக்கு உரியதாய் உள்ள ஊர்கள், 'திங்களூர், திருவாதிரையான் பட்டினம் என்னும் ஊர், நறையூர், மிகவும் பரவிய புகழினையுடைய நாலூர், இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே. கு-ரை: 'நங்களூர், தங்களூர், எங்களூர்' என்பன வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர். 'நனி நல்லிசை' எனவும், 'நன்று பாவிக்க வல்ல' எனவும் பாடம் ஓதுதல் சிறக்கும். 7. பொ-ரை: தீக்கின்ற அந்த நஞ்சினை உண்டவனும், கல்லால மர நிழலில் இருப்பவனும், கொல்லும் இடபத்தை ஏறுபவனும், செருக்குற்ற சூரியனை ஒறுத்துப் பின் அருள்செய்தவனும், தனது முடியின் மேல் அன்று மலர்ந்த எருக்கம்பூவினாலாகிய இண்டை மாலையையும், ஊமத்தம் பூவினையும் சூடியவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவன் வீற்றிருக்கும் ஊர்கள், 'இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே. கு-ரை: 'கருக்கு அந் நஞ்சு' எனப் பிரிக்க. சுட்டு, அத் தன்மையின்மேலது. இனி, 'கருக்க' எனப்பிரித்து, 'கறுக்க' என்பது, எதுகை நோக்கித் திரிந்து நின்றதாக உரைப்பாரும் உளர்.
|