328. | நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப் படியான்பலி கொள்ளு மிடங்குடி யில்லை கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல் அடிகேள்அன்ப தாய்இடங் கோயில்கொண் டாயே. | | 9 |
329. | பாரூர்மலி சூழ்மறைக் காடதன் தென்பால் ஏரார்பொழில் சூழ்தரு கோடிக் குழகை ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார் சீரூர்சிவ லோகத் திருப்பவர் தாமே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
அவ்வப் பெயரை உடைய ஊர்களைக் குறித்தன. 9. பொ-ரை: திருமாலும் பிரமனும்அறிய இயலாத தன்மையை உடையவனே, தலைவனே, நீ பிறரது வழிபாட்டினை ஏற்க நினைக்குமிடத்து, அதனைச் செய்தற்கு இங்கு நற்குடி ஒன்றேனும் இல்லை; அதற்கு மாறாக கொடிய வேடர்கள் பலர் வாழ்கின்றனர்; இத்தன்மையதான இக்கடற்கரைமேல் விருப்பம் உடையையாய், இவ்விடத்தை உறைவிடமாகக் கொண்டாயே; இஃது என்? கு-ரை: "படியான்", அண்மை விளி; 'படியாய்' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். 'கொள்ளுமிடத்து' என்னும் வினையெச்சத்தின் அத்து, தொகுத்தலாயிற்று. 10. பொ-ரை: உலகில் உள்ள ஊர்களில் மகிழ்ச்சி பொருந்துதற்குக் காரணமான திருமறைக்காட்டின் தென்பால், அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனை நம்பியாரூரன் பாடியவையாகிய இப்பத்துப் பாடல்களையும் நன்கு பாட வல்லவர், சிறப்புப் பொருந்திய சிவலோகத்தில் இருப்பவர்களேயாவர். கு-ரை: அரசன், அமைச்சன் இவரை, 'அரசு, அமைச்சு' என்றல் போல, குழகனை, "குழகு" என்று அருளிச் செய்தார். "தாம்" என்றது, அசைநிலை. ஏகாரம், தேற்றம்.
|