பக்கம் எண் :

695
 
332.

ஒன்றி னீர்கள்வந் துரைமி னோநுமக்

கிசையு மாநினைந் தேத்துவீர்

குன்றி போல்வதோர் உருவ ரோகுறிப்

பாகி நீறுகொண் டணிவரோ

இன்றி யேஇல ராவரோ அன்றி

உடைய ராய்இல ராவரோ

அன்றி யேமிக அறவ ரோநமக்

கடிக ளாகியஅடிகளே.

3



3. பொ-ரை: இறைவரை உமக்கு ஏற்ற வகையில் நினைந்து துதிக் கின்றவர்களே, நீங்கள் ஒன்றுபட்டு வந்து சொல்லுங்கள், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், குன்றிமணி போலும் நிறம் உடையவரோ? நீற்றையே குறிக்கோளாகக் கொண்டு அணிவரோ? யாதொன்றும் இலராய் இரத்தல் தொழிலைச் செய்வரோ? மற்று எல்லாம் உடையராய் இருந்தும் இரத்தல் தொழிலைச் செய்வரோ? இவையன்றி, துறவறத்தை மிக உடையரோ?

கு-ரை: "ஒன்றினீர்கள்" என்றது முற்றெச்சம்; 'ஒன்றிநீர்கள்' என்பது பாடம் அன்று.

மதிமறுவுடைத்தாயினும் சிறிதாய அதனைக் கருதாது பெரிதாய ஒளியொன்றையே கருதி ஒளியுடைய முகத்திற்கு அதனை உவமையாகக் கூறுதல் போல, குன்றிமணி சிறிது கருமை உடைத்தாயினும் அது நோக்காது பெரும்பான்மையாகிய செம்மை நோக்கி அதனை இறைவரது நிறத்திற்கு உவமையாக அருளினார். அன்றி, கருமை அவரது கண்டத்திற்கு உவமமாதற்கு உரித்தென்னுங் கருத்தினால் உவமித்ததுமாம். "இன்றி" என்றது அவரது உண்மை நிலையையும், "உடையராய்" என்றது அவரது பொதுநிலையாகிய ஆளுதல் தன்மையையும் பற்றி என்க.

துறவறத்தை மிக உடையராதலாவது, சிறந்த தவக்கோலத்தையும், யோகத்தையும், அந்தணர்க்கு அறம் உரைத்தலையும் உடையராதல். "இன்றியே இலராவரோ அன்றி உடையராய் இலராவரோ" என்பதற்கு இவ்வாறன்றி வேறோராற்றான் உரைப்பின், ஏனையவற்றோடு இயையாமையறிக.