333. | தேனை யாடுமுக் கண்ண ரோமிகச் | | செய்ய ரோவெள்ளை நீற்றரோ | | பானெய் யாடலும் பயில்வ ரோதமைப் | | பற்றி னார்கட்கு நல்லரே | | மானை மேவிய கண்ணி னாள்மலை | | மங்கை நங்கையை அஞ்சவோர் | | ஆனை ஈருரி போர்ப்ப ரோநமக் | | கடிக ளாகிய வடிகளே. | | 4 |
334. | கோணன் மாமதி சூட் ரோகொடு | | கொட்டி காலொர் கழலரோ | | வீணை தான்அவர் கருவி யோவிடை | | யேறு வேதமு தல்வரோ | | நாண தாகவொர் நாகங் கொண்டரைக | | கார்ப்ப ரோநல மார்தர | | ஆணை யாகநம் மடிக ளோநமக் | | கடிக ளாகிய வடிகளே. | | 5 |
4. பொ-ரை: தொண்டீர், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், மூன்று கண்களை உடையவரோ? மிகச் சிவந்தநிறம் உடையவரோ? வெண்மையான நீற்றை அணிந்தவரோ? பால், நெய், தேன் இவைகளை ஆடுதலையும் பலகாற் செய்வரோ? தம்மையே துணையாகப் பற்றி நிற்பவர்க்கு நல்லவரோ? மானை நிகர்த்த கண்களை உடையவளாகிய, மகளிருட் சிறந்த மலைமங்கையை அஞ்சுவித்தற்பொருட்டு ஓர் ஆனையை உரித்த தோலைப் போர்த்துக்கொண்டிருப்பரோ? சொல்லுமின். கு-ரை: "தேனை ஆடும்" என்றது உடம்பொடு புணர்த்தலாகலின், இவ்வாறு உரைக்கப்பட்டது. "மேவிய" என்றது, உவம உருபு. 'அஞ்சுவிக்க' என்னும் பிறவினை, தொகுத்தல் பெற்று 'அஞ்ச' என நின்றது. 5. பொ-ரை: தொண்டீர், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், வளைந்த பெருமை பொருந்திய பிறையைத் தலையிற் சூடுதல் உடையவரோ? 'கொடுகொட்டி' என்னும் கூத்தினை ஆடுபவரோ? காலில் ஒரு கழலை அணிவரோ? அவரது இசைக் கருவி வீணைதானோ?
|