பக்கம் எண் :

699
 
338.நமண நந்தியுங் கரும வீரனுந்

தரும சேனனு மென்றிவர்

குமணன் மாமலைக் குன்று போல்நின்று

தங்கள் கூறையொன் றின்றியே

ஞமண ஞாஞண ஞாண ஞோணமென்

றோதி யாரையு நாணிலா

அமண ராற்பழிப் புடைய ரோநமக்

கடிக ளாகியவடிகளே.

9



கு-ரை: "நீடு வாழ்பதி" என்றது, வீட்டுலகத்தை. "மாலுக்கும்", "பாடுவாரையும்" என்னும் உம்மைகள், சிறப்பு.

9. பொ-ரை: தொண்டீர், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், குமணனது பெரிய மலையிடத்துள்ள் சிறிய குன்றுகள் போலத் தம்மிடத்தில் உடையொன்றும் இலராய் நின்றுகொண்டு, 'ஞமணம், ஞாஞணம், ஞாணம், ஞோணம்' என்று சில மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு, ஒருவரையும் நாணுதல் இல்லாத, 'நமண நந்தி, கரும வீரன், தருமசேனன்' என்ற இன்னோரன்ன பெயர்களை யுடையவர்களாகிய சமணர்களால் பழிக்கப்படுதலை உடையரோ? சொல்லுமின்.

கு-ரை: 'என்ற' என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. "இவர்" என்றது, 'இத்தன்மையர்' என்னும் பொருளதாய் நின்றது. 'என்ற அமணர்' எனவும், 'இவர்கின்ற மலை' எனவும், இயைத்தலுமாம். குமணன், கடையெழுவள்ளல்கட்குப் பின்னர்த் தன் தலையையுங் கொடுத்த கொடையாளனாயினமையின், 'மலைபோல' எனக் கூறப்புகுமிடத்து, 'குமணன் மலைபோல' எனக் கூறுதல் வழக்காயினமை இத் திருப்பாடலாற் பெறுதும்; அன்றி, சுவாமிகள் காலத்தில் குமணன் மலையில் சமணர் சிலர் இருந்தனராயின், அதற்கேற்ப, 'குமணன் மலைக்கண் நின்று' என்று இயைத்துரைக்க. இனி, குமண மாமலை என்ற பாடம் உண்மையின், கு - நிலம்; மணம் - பொருந்துதல் என வைத்து 'இந்நிலவுலகத்திற் பொருந்திய மலையிடங்களில் நின்று கொண்டு' என்றுரைப்பினும் ஆம். "ஞமணம், ஞாஞணம்" முதலாக அருளியது, சமணர் ஓதும் மந்திரங்கள் மெல்லெழுத்துக்களால் ஆயவை என்பதனை நகைவகையாற் குறித்தவாறு; 'மூக்கினால் முரன்றோதி' என்று அருளினார். திருநாவுக்கரசு சுவாமிகளும். (தி. 5 ப. 58 பா. 2)